Aug 9, 2009

25

'கல்லூரி முடிந்த 25-ஆம் ஆண்டு’ சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமல் சென்று வந்தவர்களின் ஈ-மெயிலையும் புகைப்படங்களையும் மட்டுமே பார்த்தேன். மிகச்சிலரைத் தவிர பலரை எனக்கு அடையாளம் காணமுடியவில்லை. அர்த்தராத்திரியில் ஜியாவைப் பிடித்து, அது யார், இது யார், என்று கேட்டு, இவனா அவன்? என்றெல்லாம் வியந்து.... (2 வாரம் அப்புறம் மீண்டும் ஃபோட்டோக்களைப் பார்த்தபோது பல முகங்கள் ‘தடுமாறின’.) ‘சட்’டென்று தெரிந்த முகங்கள் பற்றி மட்டும்...

25-ல் கொஞசமும் மாறாமல் இருப்பது சரவணன் மட்டுமே. தலைவா! என்றவுடன் கண்ணில் தெரியும் ஒரு மகிழ்வு, ஒரு நிதானம், ஒரு பெருந்தன்மையான ஆமோதிப்பு, கொஞ்சம் குறும்பு எல்லாமே இன்னமும் அப்படியே. கொஞ்சம் சீரியஸான ஃபோட்டோக்களில் மட்டும் தெரியும் நெர்வஸான முகம்.. (தலைவர் ஹாஸ்டல் தினங்களில் ஒருமுறை ஒரு சரியான டீமுடன் ஸாக்கர் விளையாடியபோது ஸேம் ஸைடு கோல் போட்டதற்காக அவரை எல்லோரும் ‘ஓட்டிய’போது பார்த்த அதே நெர்வஸ் முகம்!). பக்கத்தில் மணிவண்ணன் அதே புன்னகையுடன். இரண்டு வருஷம் எனக்கு ரூம்மேட்டாக இருந்து ‘வராமல் வந்த தேவதை’ போல் நண்பனாக வந்தவன். (பின்னாளில் பேச்சலராக 5 பேர் அஷோக் நகர் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருந்த காலத்தில் கூட இருந்தவனின் தங்கையையே திருமணம் செய்த இரண்டு பேர்களில் ஒருவன்; இன்னொருவன் அடியேன்). ஜியா -ஜெண்டில்மேனாக (தோற்றத்தில்) மாறிவிட்டான். மனைவி மும்தாஜையும் ட்வின் மகள்களையும் புகைப்படத்தில் பார்த்து, ஜியாவை தாடியுடன் பின் லாடன் தோற்றத்தில் தேடினேன் (ஏமாந்தேன்)! ஜி.மோகனை நிச்சயம் தெரியவில்லை. உதயகுமார் அதே சின்ன முகத்துடன்..! (கொஞ்சம் ‘நாயகன்’ வேலுநாயக்கர் ஜாடை தெரியுது, நண்பா.அப்புறம் உன் பையன் பெயர்தான் என் பையன் பெயரும்). சாம்ஸன் ரவீந்திரன் -அன்றக்குப் பார்ட்டியில் பட்டையைக் கிளப்பிய டிரெஸ் உங்களுடையதுதான், முதல்வரே! அதிலும் அந்த மஞ்சள் ரோஜா... எனக்கு ’பூவே பூச்சூடவா’ நதியா நினவுக்கு வந்தாள்

AJBயை சமீபத்திலதான் பார்த்திருந்ததால் மாற்றம் தெரியவில்லை. சொல்லப்போனால் கிண்டி காலத்திற்குப் பின் மாறாத முக லிஸ்டில் AJBயும் உண்டு. பக்கத்தில் யார்?.... அட, நம்ம அருள்காந்தி! கடைசி வருஷம் எனக்கு ரெண்டு ரூம் தள்ளி இருந்தவன்...லியா, வெங்கடேசப் பிரசாத் இருவருக்கும் கம்ப்யூட்டரில் ’25 வருஷத்திற்கு அப்புறம்’ என்று எக்ஸ்ட்ராப்பொலேட் செய்த முகம். சுபாராணி..? First Block அருகே அவ்வப்போது துள்ளலுடன் கண்ணில் படும் சுபாராணி இது இல்லையே என்று நினைத்தேன் -தினமலரில் ஃபோட்டோ பார்க்கும் வரை :-)! கோகிலாவை யூகிக்க முடிந்தது, சிலவருஷம் முன்புதான் ஸான் ஹோஸேயில் பகல் வீட்டில் சந்தித்ததால். ’சட்’டென்று தெரிந்த ஒரே பெண் பாலா தான். பாலாவுக்குப் பின்னால்.... Mech ல் ’ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணா’க இருந்த சுகந்தகுமாரி. கடைசியாக மாணிக்ஸின் கல்யாணத்தில் (1990?) பார்த்ததாக ஞாபகம். 5 வருஷமும் படு சீரியஸ்.... என் project-mate. சிரிக்கும் சுகந்தகுமாரியை இப்போதுதான் புகைப்படத்தில் பார்க்கிறேன்... சாம்ஸன் நல்லதம்பியும் மாறவில்லை. (ஒருமுறை துபாயில் வேல்முருகனுடன் உன்னைப்பார்த்தேனா?). ஸ்ரீதர் விழுந்தவுடன் மூன்றாம் மாடியிலிருந்து இவன் குதித்த -அந்த impulsive & instinctive moment -கிண்டி வாழ்க்கையின் ஒரு மறக்க முடியாத நிமிஷம்.

பகலவன் -சில வருஷம் முன்புதான் பார்த்திருந்தேன்! கொஞ்ச நாள் முன் இவன் திரிஷாவுடன் எடுத்த ஃபோட்டோவைக் கேட்டபோது, சூர்யாவுடன் இருக்கும் படத்தை அனுப்பினான். ”நிழல்கள் நட்சத்திரங்களோடு இருந்தாலும், நிஜங்கள் என்னவோ ஸான் ஹோஸேயில் தான்” என்று புதுக்கவிதை இல்லாமல்! அது என்னடா, அந்த காலத்திலே நீ ஓவியராகவும் இருந்திருக்கே...? பூர்ணிமாவை நீ வரைஞ்சிருக்கிற சிரத்தையைப் பார்த்தால்... பாக்யராஜ் தான் உன் முதல் எதிரி போல! :-)ராஜேஸ்வர் -ஆனாலும் நீ கிண்டி மீட்-டிற்கு ரெண்டு நாள் முன் தான் (என் மனைவி) தீபிகாவை ரத்னகுமார் வீட்டு விழாவில் பார்த்து, ‘நீங்க யார்? தெரியலையே..” என்று சொல்லியிருக்க வேண்டாம்! ”உங்க பசங்களுக்கு கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்திதான்...பாருங்களேன், 3 வருஷம் முன் தான் அவர் வீட்டிற்குப் போயிருக்கோம்; நான் 2004 ’கிண்டி மீட்’டிற்கு வேற போயிருக்கேன்.. இருந்தும் முழிக்கிறாரு! வயசானாலே மறதி வந்திடும்கிறது நிஜம் தான் போலும்” என்கிறாள், என்னிடம்! (’வயசு’ பற்றி கமெண்ட் வந்தால் நான் ரொம்ப alert ஆகிடுவேன், மச்சி!)

அறவாளி -பாதி முகத்திலும் அடையாளம் தெரியுது, வாத்யாரே! பப்பி கொஞ்சம் மெலிந்திருக்கிறான். பப்பி பின்னால் ’ஆத்து’ என்று ‘ஆசையாக’ அழைக்கப்பட்ட ஆத்மலிங்கம். அடுத்து படிப்பாளி ரவீந்திரன். (ஹாஸ்டலில் சினிமா, டி.வி, அடையாறு என்று சுற்றித்திரியும் போது இவ’ரை’ப் பார்த்தால் ’பயமா’க இருக்கும்! “என்னடா, எப்பவும் படிச்சிக்கிட்டிருக்கா’ர்’...”). சம்பத்குமார் -அநேகமா நம்ம செட்ல ‘காதல் வைரஸ்’ தாக்கிய முதல் ஆள் இவனாகத்தான் இருக்கும். ஏனோ அப்பவே இவனுக்கு ஜெண்டில்மேன் பெர்ஸனாலிட்டி இருந்தது. (2000ல் சந்தித்தபோது, இவனும் இவன் மனைவியும் DGM). அடுத்து பாலகுமார். ’ஆளவந்தான்’ “நந்தகுமாரா.... நந்தகுமாரா... ” பாடல் ஸ்டைலில்: “பாலகுமாரா.... பாலகுமரா.... 25 வருஷம் அப்புறமும் எங்களை ‘ஆ’ன்னு பார்க்க வச்சியேடா...” 50-ம் வருஷ meet வெச்சாலும், சென்னப்பன் எழுதிய மாதிரி, ’கடலை’ விஷயத்தில் நாங்க உன்னைப்பார்த்து கமெண்ட் அடிக்கிறதோட சரி!

தாமஸ் -லியோ கிளப்பில் தீவிரமாகி, “ஹாய்” என்றாலே “கொஞ்சம் GH வரை வர முடியுமா..? Blood donation..." என்பான். அதனாலேயே ‘பாசமாக’ டிராகுலா என்று பெயர் வாங்கினான்.அண்ணாமலை... அதே ‘நாட்டாமை’ பார்வை! பக்கத்தில் கும்பகோணம் கணேசன்.... இரண்டு (அல்லது மூன்று) கணேசன்கள் இருந்ததால் குழப்பம் தவிர்க்க இவன் மட்டும் ஊர் பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டான். ’குண்டலினி சக்தி’ என்றெல்லாம் எங்களுக்கு ‘விவகாரமான’ விஷயங்களைப் பேசும் இரண்டு ஆள்களில் இவன் ஒருவன். (இன்னொருவன் வெங்கடரமணி). ரொம்ப சாந்தமானவன். நானும் பொன்ராஜும் சனிக்கிழமை காலைகளில் சுஜாதாவின் கொலையுதிர் காலத்திற்காக குமுதத்திற்கு ஆலாய்ப் பறக்கையில், இவன் “கல்கி, வந்தியத்தேவன்’ என்றெல்லாம் பேசியிருக்கிறான். பக்கத்தில் பத்மநாபன்... 2nd block கில் ரூம் 26ல் பார்த்ததிற்கு அப்புறம் இப்பத்தான் பார்ப்பதாக ஞாபகம்...ஸ்ரீதர் -’சுனாமி’ ஸ்ரீதர் -1169, மாறவேயில்லை. ஜப்பானுக்கு ஒருமுறை வந்து எனக்கு ஃபோன் கூடப் பேசவில்லை; நேரில் பார்க்கும்போது ’பிடி,பிடி’ன்னு பிடிக்கணும்!

செந்தில் அரசு முகமும் அச்சுமாதிரி அப்படியே. பின்வரிசையில் குஜிலி (நாகராஜன்) முகம் கொஞ்சம் ’தடுமாறி’, GS என்று நினைத்திருந்தேன்! அடுத்து நிற்கும் காத்தவராயனைத் தெரியவில்லையென்றால் உதைப்பான் -’எங்க ஊர் மக்கா’வாச்சே! பொக்கல் முருகானந்தமும் மாறவில்லை. அடுத்து GS...1170. என்னைக் கேட்டால் IIT professor ஆகும் -Operations Research ல் text book எழுதும்- அத்தனை விஷயங்களும் GSஸிடம் 1984லேயே இருந்தன. எனக்கும் ’சௌபா’வுக்கும் project-mate; அதனாலேயே இயல்பாகவே இவனுக்கு இருந்த பொறுமை இன்னும் ஒருபடி அதிகமாயிருக்க வேண்டும்! திருமாறன் -உன் எழுத்தின் ஸ்டைல் மட்டுமல்ல, உன் முகமும் மாறவில்லை, மச்சி! அடுத்தமுறை சென்னை வரும்போது உன்னை அமிஞ்சிக்கரையில் பிடிக்கவேண்டும். அடுத்து அத்லெட் ரவியும் அப்படியே. முன்னொரு காலத்தில் திருவொற்றியூரில் KCP என்ற கம்பெனிக்கருகே சந்தித்ததாக ஞாபகம். எலெச்ட்ரிகல் ‘விச்சு’- என்ன மாறுவேஷத்தில் வந்தாலும் உன் முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது, நண்பா! பக்கத்தில் Production ரவி என்று ஞாபகம். நானும் இவனும் ஒரு 6 மாதகாலம் ‘கராத்தே மணி’யிடம் budokai class க்குப் போயிருக்கிறோம். ரகுவை சில வருஷம் முந்தான் ஹைதராபாதில் பார்த்திருந்தேன். (ஐஸ்வர்யா என்று girl babyக்குப் பேர் வைப்பார்கள்; தெரியும்; சூஷ்மிதா? ரகுவின் பெண் பெயர் அதுவே). அதென்னவோ தெரியவில்லை.... வாழ்க்கையின் இக்கட்டான சமயங்களில் ரகு உதவியிருக்கிறான். சூரி -சில வருஷம் முன்தான் ஆர்லண்டோவில் பார்த்திருந்தேன். இவன் எனக்குத் தந்த ’திருக்குறள் -எளிய உரை” அவ்வப்போது நுனிப்புல் மேய்வேன். 25 வருஷத்தில் ’சுத்தமாக’ மாறிவிட்ட முகங்களில் இவனதும் ஒன்று. சிவக்கொழுந்து -அன்றும் இன்றும் அதே அர்ஜுன் முகம்!

L.Sundar அந்தக் காலத்திலேயே photograhpyயில் தீவிரமாக இருந்தான். AK-47 மாதிரி காமிராவை ஒருமுறை எடுத்து வந்த போது நான் ஆர்வக்கோளாறினால் ‘விலை என்ன?’ என்று கேட்க, “சுமார் 20,000 ரூபாய்’ என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தான்! ’தாமரைக் கண்ணன்-செந்தாமரைக்கண்ணன்’ எப்பவும் எனக்குக் குழப்பம் -25 வருஷம் ஆகியும் இன்னும் தீரவில்லை! ரத்னகுமார் -சிங்கப்பூரில் இருப்பதால் இவன் வீடு எங்களுக்கு transit stopover மாதிரி ஆகிவிட்டது. போனவருஷம் போல் இன்னொருமுறை ஜப்பானுக்கு குடும்பத்துடன் வந்து எங்களுடன் ஒரு 2-வாரம் ’டேரா’ போடு, மச்சி! காமராஜ் -’பட்டி வீரன் பட்டி’ நாயகனின் அதே சிரிப்பு! 1992-ல் நெய்வேலியில் சந்தித்தது. 1983-ல் ஹாஸ்டலில் எடுத்த ஃபோட்டோ ஒன்றில் மக்களுடன் சேர்ந்து ஒரு ஜோடிக் ’கால்கள்’ மட்டும் தெரிய, 25-வருஷம் அப்புறம் அந்த ஃபோட்டோவைப் பார்த்த பலரும் அந்தக் கால்கள் காமராஜின் கால்கள் என்று சந்தேகத்துக்கிடமின்றிச் சொன்னார்கள்! 1175 சுரேஷ்குமாரை அடையாளம் தெரிவதில் கஷ்டமில்லை. வெங்கியை இன்னொரு ஃபோட்டோவில் பார்த்தபோதும் தெரியவில்லை -5 வருஷம் முன் நியூஜெர்ஸியில் பார்த்திருந்தபோதும். தீபிகாதான் வெங்கியின் பெண்ணைப் பார்த்து தெரிந்து ‘அட, ரோகினி” என்றாள். நியூயார்க்கில் எங்கள் மற்றும் பொன்ராஜ் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு நாள் sightseeing வந்த சின்னஞ்சிறுமியா இது?

சத்தியமாக அடையாளம் தெரியாத முகம் சுப்பையாவுடையது. 1172. கல்லூரி காலங்களில் நெருக்கமாக இருந்து அதற்கப்புறம் தொடர்பில்லாத நண்பர்களில் ஒருவன். “ஏன் வரவில்லை?” என்று பெங்களூரில் இருந்து மெயில் போட்டிருந்தான். வெற்றி மற்றும் செந்திலை 1-2 வருஷத்திற்கு முன்தான் சந்தித்திருந்தேன். வெற்றியின் trade-mark வெடிச்சிரிப்பு ஃபோட்டோவிலும் தெரிகிறது. செந்திலை சேலத்தில் சந்தித்தபின் தீபிகா மறக்கவேயில்லை - கிண்டி நண்பர்கள் பற்றி அவன் கமெண்ட்டிற்காக: (”நம்ம பசங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பெண்களுக்கெல்லாம் நல்ல luck மச்சி... சரியான புளியங்கொம்பா பிடிச்சிட்டாங்க...”)

கென்யா ராஜேந்திரன் தெரிகிறான். சஞ்சீவி தெரிகிறான். சென்னப்பன், கலை, சிவஷங்கர், விஜய்பாபு, சௌபா, பொன்னுசாமி, சாய்சுந்தர்... மற்றும் Domkundwar என்றே பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த முரளீதர்...

நான் மிஸ் பண்ணியது துரதிருஷ்டமே.

சுபாராணி “let's have this kind of get togethers often" என்று எழுதியது ஒரு initial euphoria மட்டுமில்லாமல் அடுத்த get-together விரைவிலேயே நடக்க வேண்டும்; அதில் கலந்துகொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment