Sep 27, 2011

நீண்ட இடைவெளிக்குப் பின்…..

சில மாதங்கள் வலைமனைக்குக் கட்டாய ஓய்வு தந்ததில், எழுதுவதின் நோக்கம் பற்றிப் பலமுறை யோசித்து, சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை. சுஜாதாவே ‘இலக்கியம் என்பதே ஒரு பயனற்ற வேலையோ’ என்று சந்தேகம் வருவதாக ஒருமுறை எழுதியிருக்கிறார் (கற்றதும் பெற்றதும் –டில்லி குளிரில் பிளாட்பாரத்தில் தூங்கும் குழந்தைகள் பற்றி எழுதும்போது). இருந்தும், ‘நல்ல எழுத்து’ பற்றிப் பலமுறை அலசியிருக்கிறார். அழகான ஒரு காட்சியை காமிராவில் ‘கிளிக்’ செய்து அதன் அழகை, மனதில் அது ஏற்படுத்திய ஒரு சின்ன பாதிப்பை வருடங்கள் கடந்தும் நினைவுபடுத்திக் கொள்வது மாதிரி, (நல்ல) கவிதையும் எழுத்தும் மனதின் உணர்வுகளைக் காலம் கடந்து நிற்க வைப்பதாக அவர் எழுதியது நிஜமே (என்றாலும், பழசை மீண்டும் நினைப்பது அவசியமா என்ற கேள்வி எழுகிறது!)


லைமனையில் இன்றைய தேதிக்கு எழுதிக் குவிப்பவர்கள் ஏராளம். காதல் முதல் ‘புடலங்காய் சாம்பார் வைப்பது எப்படி?’ என்பது வரை தமிழ் கூறும் நல்லோர்கள் வலையில் தொடாத சப்ஜெக்ட் இல்லை. “என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ளும் களம்” என்றெல்லாம் அதி தீவிர முன்னுரை கொடுத்துவிட்டு “சேகர் பஸ் ஸ்டான்டில் காதலிக்காகக் காத்திருந்தான்” போன்ற சிறுகதையோ, “செல் போன் சிணுங்கியது. காதில் வைத்தேன்; என்னவள் சிணுங்கினாள்” என்று டப்பா புதுக்கவிதையோ எழுதிகிறார்கள். பின்நவீனத்துவம் ஏன்று புரியாமல் எழுதும் மோடிமஸ்தான்கள் ஒருபுறமும், மோடிமஸ்தானின் கூட்டத்தில் வேடிக்கை பார்க்கும் வெட்டிக்கும்பல் ஒருபுறமுமாக, வலைமனையில் குவியும் குப்பைகளுக்கு அளவே இல்லை.

ருந்தும் எழுதுவதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. “சொல்லப்போனால் எல்லோருக்குமே கதை சொல்லும் ஆர்வம் இருக்கிறது” என்று சுஜாதா சொன்னதுபோல. எழுத்து, ஒரு ஃபோட்டோ ஆல்பம் போல. அவ்வளவே. சமயங்களில் புகைப்படம் சொல்லாததையும் எழுத்து சொல்லும்போது, அது சுவராஸ்யமாகிறது.

1 comments:

Anonymous said...

You have a gem of Tamil. Keep it up. To appreciate it shall I use a hindi word "behetherin"

Post a Comment