(9-Oct-2009 issue)
'என் மக கல்யாணமாகி ஃபாரின்ல இருக்கா...' 'என் மகன்கூட கொஞ்ச நாள் ஃபாரின் போய் தங்கிட்டு வந்தேன்...'
இப்படி வெளிநாடு பற்றி யாராவது பேசினால்... விழிகள் விரிய அதற்கு காது கொடுக்காதவர்கள் குறைவு. அதற்குக் காரணம்... அந்த நாடுகளைப் பற்றியெல்லாம் நம் பெரிய திரை, சின்னத் திரை ஆகியவற்றின் புண்ணியத்தில் மனத்திரையில் கூடு கட்டிக் கொண்டிருக்கும் பிம்பங்கள்தான்!
உண்மையிலேயே... ஃபாரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது..?சொர்க்கம்தானா..? இல்லை... 'சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா' கதைதானா?
உலகெங்கும் இருக்கவே இருக்கிறார்கள் எண்ணற்ற 'அவள் விகடன்' வாசகிகள்! அவர்களிடமே கேட்டு விடலாமே என்று போன், மெயில், சாட்டிங் என்று நவீன தொழில்நுட்பம் தந்திருக்கும் அத்தனை ஆயுதங்களையும் ஏவ ஆரம்பித்தோம்...
ஜப்பானிலிருந்து தீபிகா சுபாகர்:
''அவர் இன்ஜினீயர், நான் சாஃப்ட்வேர் டெவலப்பர். ஜப்பான்ல தாகஸாகோங்கற இடத்துலதான் குடியிருக்கோம். எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்.
முதல் பிரச்னையே மொழிதான். ஜப்பான்ல துளிகூட இங்கிலீஷ் கிடையாது. திணறிட்டோம் திணறி. கடைக்குப் போனா, காய்கறி எது... சிக்கன், மட்டன், மீன் எது...னு தெரியாம திணறிடுவோம். ஜப்பான் மொழி தெரியலனா... இந்த ஊருல குப்பைக் கொட்டமுடியாதுனு புரிஞ்சதும்... ரெண்டே வாரத்துல அந்த மொழியைக் கத்துக்க ஆரம்பிச்சிட்டோம். ஆனா, பக்கத்து வீட்டுப் பொண்ணைப் பாத்து, 'உன் பேர் என்னா?'னு கேக்குறதுக்கே முழுசா ஆறு மாசமாச்சு... (அம்மாடியோவ்!)
நம்ம ஊரு பண்டிகை எதுவும் ஞாபகத்துக்கு வராது. அம்மா போன் பண்ணி 'பிள்ளையார் சதுர்த்தி ஞாபகம் இருக்குல்ல?னு கேட்டா மட்டும்... உடனே கொழுக்கட்டை, பணியாரம் செஞ்சு பிள்ளைகளுக்குக் கொடுப்பேன். ஒரு வழியா தமிழ்க் குடும்பங்களை கண்டுபிடிச்சு வருஷத்துக்கு ஒரு தடவை டிசம்பர் 31ம் தேதி நைட் கூடிப் பேசறத வழக்கமாக்கிட்டோம்'' என்றெல்லாம் சொன்ன தீபிகா,
''சுத்தம், சம்பளம்னு ஆயிரம் இருந்தாலும்... நம்ம வீட்ல இருக்கற மாதிரி மத்த வீடெல்லாம் வருமா?'' என்று இந்தியா மீதான தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.
கடைசியாக நம் வயிற்றெரிச்சலைக் கிளப்பும் வகையில் அவர் தட்டிவிட்ட தகவல்..
''நாங்க ஜப்பான் வந்ததிலிருந்து விலைவாசி உயர்வுங்கற பேச்சே இல்லை. உள்ளூர் ஃப்ரெண்டுங்ககிட்ட கேட்டா... பத்து வருஷமா விலைவாசி ஏறவே இல்லைனு சொல்லி வாய் பிளக்க வச்சுட்டாங்க.''