Dec 1, 2009

சோமபானம்

அண்மையில் கிண்டி நண்பர்களின் மத்தியில் சில ’ரவுண்ட்’கள் வந்த ஒயின் பற்றிய மெயில்கள் பற்றி.....
-----------------------------------------------------------------------------------------------------------

ஒயின் மெயில்கள் ஒரு ரவுண்டிற்கு மேல் கொஞ்சம் ‘கிக்’ கலந்து வந்துகொண்டிருக்கின்றன. முதலில் ’இலைமறை காயா’க (உருவக அணி?)வந்த மெயில்கள் பின் தைரியம் பெற்ற்து, ஒயின் கொலஸ்ட்ரால் குறைப்பதாலோ, அல்லது அப்படி ஒரு கருத்து பெரும்பாலும் குடிமக்கள் மத்தியில் உலா வருவதாலோ இருக்கலாம்.

ஆல்கஹாலுடன் நமக்கு ஏற்பட்ட பரிச்சயத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

முதல் டிரிங்க், பலருக்கும் முதல் சைக்கிள், முதல் காதல் போல நினைவில் இருக்கும். ’என்னவோ ஏதோ; ஒருமுறை முயன்று தான் பார்ப்போமே’ என்ற ஆர்வத்தில் தான் பெரும்பாலும் ஆரம்பிக்கிறது. இருந்தும் கிண்டி ஹாஸ்டலில் மிகப் பெரும்பாலோர் -என் மாதிரி - ஆல்கஹாலை நுகர்ந்து கூடப் பார்க்கவில்லை. (வெள்ளிக்கிழமை மூட்டைமுடிச்சைக் கட்டிக்கொண்டு பாண்டிச்சேரி கிளம்பிவிடும் ‘தம்பி’யிடம் “அப்படி என்னடா ஊருக்கு வாராவாரம் ஓடிப்போயிடறே?” என்று கேடடால் “கொஞ்சம் ஒயின் குடித்துவிட்டு, என் ஃபியான்ஸியுடன் டான்ஸ் பண்ணுவேன்” என்று சொல்வான். அவனைப் பொறாமையுடன் பார்ப்பதோடு சரி. மற்றபடி ஆல்கஹால் சற்றுத் தள்ளியே நின்றது). குடித்த மிகச் சிலரும் பியர் பாட்டிலின் மூடியளவுக்குக் குடித்ததாகத் தான் ஞாபகம்.

என் முதல் பியர் ஆந்திரா ராமகுண்டத்தில் ஆபீஸில் டூர் போயிருந்தபோது -1986இல்- அரங்கேறியது. பாரில் குடித்துவிட்டு திரும்ப ரூம் வரை நடந்து வரும்போது ’கெக்கே பிக்கே’ என்று நான்-ஸ்டாப்பாகச் சிரித்துக்கொண்டே வந்தது ஏன் என்று இன்றுவரை தெரியவில்லை. ஆல்கஹால் கொலஸ்டிராலைக் குறைக்குதோ என்னவோ, நமக்குள் மெலிதாகப் படர்ந்திருக்கும் inhibition ஐ உடைத்து எறிகிறது. பாரில் வெயிட்டரை நட்பு பாராட்டி கைகுலுக்கி பிரியாவிடை பெற்ற நம் நண்பர்கள் பலர்! அப்புறம் வேலைக்குப் போனபின் எள் விழுந்தாலும் பார்ட்டி தான்; - சம்பளம் வந்தால், சம்பளம் கூடினால், போனஸ் வந்தால், பொண்ணு பார்க்கப் போனால், பொண்ணு பிடித்துவிட்டால், அப்புறம் நிச்சயம், கல்யாணம், என்று எல்லாம் wet பார்ட்டிகள். வெளிநாடு போய்வரும் நண்பர்கள் மறக்காமல் கொண்டுவருவது Scotch. பல முறை நாலு லார்ஜ் விஸ்கிக்குப் பின் ஸ்கூட்டரை ஓட்டி அஷோக்நகர் வரை (பெரிதாக) விபத்தில்லாமல் வந்ததற்கு ஜாதகம் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்.

கல்யாணத்திற்கு முன் தினம் கிண்டியர்கள் ஒரு வேனில் வந்து இறங்க, அவர்களுடன் தூத்துக்குடியின் நிலாக் காயும் பீச்சில் அடித்த கூத்தில், கல்யாண ஆல்பம் முழுவதும் ’மாப்பிள்ளை’ (நான் தான்!) சிவந்த கண்ணுடன் இருக்கிறார்!

ண்ணி’ பார்ட்டிகளின் தமாஷ் சில சமயம் மறப்பதில்லை. ஒருமுறை Sindhoori பாரில் 2-3 பெக் தாண்டிய உச்சத்தில் கிளாஸை மேசையில் வைக்கும்போது ஒரு ‘வேகத்தில்’ வைத்து, கிளாஸை உடைத்து விட்டேன்..... பெரிதும் வருந்தினேன் “இந்த அளவு நிலை தடுமாற்றமா?” என்று. Profusely apologized to our friends for such a behavior - only to be told by our friends the next day that it was not I (but my then 'would be b-i-l') who broke it! ’கிக்’ கண்ணை மறைத்தது!

வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே ஃபாரின் போய்விட்டிருந்த நம் நண்பன் மனைவியுடன் விடுமுறைக்குச் சென்னை வந்திருந்தபோது, கொண்டு வந்த ஷிவாஸ் ரீகலுடன் இன்னொரு நண்பனின் மொட்டை மாடியில் 5-6 பேருடன் பார்ட்டி. நான் எல்லார் தம்ளரிலும் விஸ்கியை ஊற்றிவிட்டு சோடா பாட்டிலைத் திறந்து வருவதற்குள் ஒருவன் -ஃபாரின் பார்ட்டி- ‘ரா’ வாக ஒரு ரவுண்ட் முடித்துவிட்டான். “சரி, ஃபாரினில் அப்படித்தான் வழக்கம் போல” என்று நினைத்து நானும் அடுத்த ரவுண்டை ஊற்றினேன். கொஞ்ச நேரத்தில் பேச்சு போகும் வேகத்தைக் கவனித்த அவன் மனைவி “என்ன, கொஞ்சம் லிமிட்டாக இருங்க...” என்று சொல்லப்போக, இவன் (அதற்குள் 4 ரவுண்ட் முடித்துவிட்டிருந்தான்) “என்ன மிரட்டறே? ஃபாரின்ல நம்ம வீட்டிலே நீயும் என்கூடச் சேர்ந்து குடிக்கிறவள் தானே?” என்றான். எங்களுக்கு ஷாக்! (பின்னால் தெரிந்தது -அவன் மனைவிக்கு ஆல்கஹால் வாசனை கூடத் தெரியாது; அவள் வாயை அடைப்பதற்காக அவன் ஏவிவிட்ட ‘பொய்’ ஆயுதம் அது என்பது).


ப்பானில் ஜப்பானிய நண்பர்கள் வீட்டிற்கு பார்ட்டிக்குப் போனால் தவறாமல் ஒயினும் ’ஸாகே’யும் இருக்கும். இந்தியர்கள் பார்ட்டி பெரும்பாலும் ‘dry’ தான். அமெரிக்காவில் குறைந்தபட்சம் ஒயின் இல்லாத ‘தேசி’கள் பார்ட்டி இல்லை எனலாம். கூட்டங்களில் பெரும்பாலும் இல்லத்தரசிகள் ஒயினைத் தொட்டும் பார்ப்பதில்லை. இந்தப் ‘பெரும்பாலும்’ காலப்போக்கில் ‘மிகச் சிறும்பாலும்’ என்று ஆகிவிட்டது! “டேஸ்ட் கூடப் பண்ணியதில்லை” என்று சொல்லும் NRI இல்லத்தரசிகளை நம்பாதீர்கள்!

யினின் கொலஸ்ட்ரால் குறைக்கும் பண்பு பற்றிப் பரவியிருக்கும் கருத்துக்கள் மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப் பட்ட மாதிரித் தெரியவில்லை. ஃபிரான்ஸில் இதய நோயாளர் எண்ணிக்கை குறைவு என்கிற புள்ளிவிவரத்திலிருந்து கிளம்பிய கிளைக்கதையாக இது இருக்க வேண்டும். மாணிக் குறிப்பிட்டிருந்த AHA ஸைட்டில் ஒயினைக் குடி என்கிறார்களா, குடிக்காதே என்கிறார்களா என்பது தெரியாமல் ‘மையமாகச்’ சொல்கிறார்கள் -’இதுவரைக் குடிக்கவிலலையென்றால் இனிமேல் குடிக்காதே’ என்று. டயபடீஸைக் குறைக்கும் என்ற குஜிலியின் கருத்தை நான் எங்கும் கேள்விப்பட்டதில்லை. ADA சைட்டில் “டயபடீஸ் இருந்தாலும் ஸ்வீட் சாப்பிடு; ஒண்ணும் குடி முழுகிப் போகாது” என்கிற ரீதியில் சொல்கிறவர்கள் (” It is one of the myths that those who are diabetic should avoid sweets completely” ) கூட, ஒயினின் டயபடீஸ் எதிர்ப்பு பற்றி மூச்.

மக்கள்தொகை 500,000க்கு மேல் இருக்கும் நாடுகளை எடுத்துக்கொண்டால் ஜப்பானியர்கள் தான் உலகின் மிக அதிக நாள்கள் உயிர்வாழும் மனிதர்கள். அநேகமாக எல்லோரும் தினமும் அரிசியிலிருந்து செய்யும் ‘ஸாகே’ எனற தேசிய’ பானத்தைக் குடிக்கிறார்கள்! 15 முதல் 25 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும் ‘ஸாகே’ பார்க்க தண்ணீர் போல இருக்கும். Colorless, odorless. எவ்வளவு குடித்தாலும் மறுநாள் hang-over இருக்காது. ஜப்பானியர்களின் longevityக்கு ‘ஸாகே’ காரணமா என்று யாரும் ஆராயவில்லை.

ரு சேஞ்சுக்காக அந்த நாட்களில் நானும் வசீகரனும் தூத்துக்குடி அருகே பனங்காடு போய், பனைமரத்திலிருந்து fresh ஆக இறக்கிய கள் குடித்திருக்கிறோம்; குடித்துவிட்டு, தினம் 30ரூ. வருமானத்தில் கள் குடித்து 2 மனைவிகளுடன் வாழ்வதாகச் சொன்ன அந்தப் பனை ஏறுபவர் போல் உலகின் மிகச் சந்தோஷமான நபர் யாரும் இல்லை என்று சத்தியம் செய்தோம்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் ஒருமுறை Campari என்ற இத்தாலிய விஸ்கி (25% ஆல்கஹால்; 1:3 ஆரஞ்சு ஜூஸில் கலந்து குடிக்கலாம்) என்னைக் கவர்ந்தது. லேசாகக் கசந்து, வித்தியாசமான டேஸ்ட். முயன்று பாருங்கள். (AHA ஸ்டைலில்: இதுவரை மதுவைத் தொடாதவர்கள் தவிர்க்கவும்). என்னை ‘உண்டு, இல்லை” என்று பண்ணியது Beijing கில் Baijiu எனப்படும் சீனாவின் தேசிய பானம். ஒரு ‘சிப்’பில் உடம்பே ’ஜிவ்’வென்று முறுக்கிவிட்டது போல் ஆகியது. அடுத்த ‘சிப்’பில் ‘நானாக நானில்லை கண்ணே’ ஆனேன். அடுத்த நாள் காலை விசாரித்ததில் 54% ஆல்கஹாலாம்!

ந்தியா வருகையில் நண்பர்களுடன் லேசாகக் குடித்துவிட்டு கிறக்கத்துடன் வீட்டிற்கு வந்து அம்மாவின் முகத்தைப் பார்க்காமல் மாடிக்குப் போய்ப் படுத்துக்கொள்வதுண்டு. அம்மாவிற்குத் தெரியும் என்றாலும், அதை நிறுத்த வேண்டும் என்று தோணவில்லை. தைரியம்! ஆனால், ஏனோ தெரியவில்லை, பையனிடமும், பெண்ணிடமும் அந்தத் தைரியம் வரவில்லை. வீட்டில் ‘ஸாகே’ பாட்டில் அரிசி மூட்டைக்குப் பின்னால் ஒளிந்து தான் இருக்கும். வீட்டில் குடிக்கும்போது (அதற்கென்று தூத்துக்குடியிலிருந்து கொண்டு வந்த) எவர்சில்வர் தம்ளரில் தான் குடிப்பேன் -பசங்கள் அந்தப் பக்கம் வந்தாலும் தெரியாமல் இருப்பதற்காக. ”நம்மைப் பார்த்து குடியைக் கற்றுக்கொள்ள வேண்டாம்” என்ற எண்ணம் இன்னும் தீர்மானமாக இருப்பதற்குக் காரணம், ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அல்லது பயம்.

இருந்தும், மது பற்றிய என் அடிப்படைக் கருத்துக்களில் மாற்றம் இல்லை.

பால், குழந்தைகளின் பானம்.
தேனீர் பெண்களின் பானம்.
மது? தேவர்களின் பானம்!
.

0 comments:

Post a Comment