சென்ற ஆண்டு சைனாவின் Beijing வரை குடும்பத்துடன் போய்வந்ததற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள்: 1. மதுவுக்கு ’சொல்லிக்கொள்கிற’ மாதிரி உலகப் புகழ்பெற்ற ஒரு இடத்திற்குப் போக நீண்ட நாள் ஆசை. (”Great Wall of China”) 2. தீபிகாவுக்கு அப்படியெல்லாம் பெரிதாக ஆசை ஒன்றும் இல்லையென்றாலும், ”ஜீன்ஸ்” பார்த்ததிலிருந்து ஏதோ ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு உலகின் ஏழு அதிசயங்களையும் பார்த்துவிட வேண்டுமென்று ஒரு ’சின்ன’, எளிய ஆசை!
சீனப் பெருஞ்சுவரில் நடந்தபோது கொஞ்சம் ‘கிக்’ ஆகத்தான் இருந்தது -அத்தனை சரித்திரப் பெருமை பெற்ற இடத்தில் இருப்பது குறித்து. டூரிஸ்ட்களிடம் பாப்புலராக உள்ள சுமார் 3 கி.மீ. பகுதி நன்றாகப் பராமரிக்கப்பட்டு பழமை முற்றிலும் மிஸ்ஸிங். இருந்தும் பரந்து விரிந்த மலை நடுவே வளைந்த பாம்பாக நீண்டு தொடரும் சுவர் அதன் சரித்திரத்தில் ஆர்வம் ஏற்படுத்துகிறது.
Ban Li Chocho (அரை பத்தாயிரம் சுவர்) என்ற பெயரில் 5,000 கி.மீ. தூரம் வரை மலை மேல் கட்டப்பட்டிருக்கும் அபாரமான இந்த சுவர், மற்றைய அதிசயங்களைப் போலவே பெரும்பாலும் மனித அடிமைகளைக் கொண்டோ, ஒரு தனி மனிதனின் முட்டாள்தனமான கணத்தின் முடிவினாலோ கட்டப்பட்டது. எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்கிறேன் பேர்வழி என்று விரயமாக்கப்பட்ட மக்கள் சக்தி. குறிப்பாக யாரிடமிருந்து காக்க வேண்டும் என்று கட்டினார்களோ, அந்த அரசன் லஞ்சம் கொடுத்து சுவரைத் தாண்டி வந்து விட்டதாக ஹோட்டலில் நான் படித்த சரித்திரக் குறிப்பு சொல்கிறது. The Great Wall of China did not serve its purpose!
சுமார் 3 மீட்டர் அகல சுவரில் நடக்கையில் ஆங்காங்கே குளிருக்கு குல்லா விற்கிறார்கள். புகைப்படக்காரரிடம் பேரம் பேசினால் பாதியாக விலை குறைகிறது. 10 யுவானுக்கு (சுமார் 60 ரூபாய்) விற்கும் கை அகல சீனப் பெருஞ்சுவரின் மாடல், கொஞ்சம் தள்ளிப் போனால் 1 யுவான் என்று கூவுகிறார்கள்.
Forbidden City என்று ஏனோ அழைக்கப்படும் அரண்மனையும் ’அதட்டல்’ ரகத்தில் ஒரு ஆணவத்துடன் இருக்கிறது -இந்தியாவின் அரண்மனைகள் போலவே. பாதுகாப்புக்காக மட்டுமன்றி, பார்த்த மாத்திரத்தில் அபரிதமாகத் தெரியும் enormity உலகெங்கிலும் எல்லா அரண்மனைகளுக்கும் பொதுவாக இருக்கிறது. (ஜப்பானின் Casteகள் இதற்கு விதிவிலக்கு). ”The Last Emperor படத்தில் சின்ன emperor சைக்கிள் விடும் இடம்” என்றதும் டூரிஸ்ட்கள் படமெடுத்துக்கொள்கின்றனர். 6 மீ x 6 மீ அளவில் மிகப்பெரிதாக மா சே துங் படத்தை நுழைவாயிலில் வைத்து “சேர்மன் மா” என்கிறார்கள்.
அதற்கு எதிர்த்தாற்போல் இருப்பது பின்னாளில் சைன எதேச்சாதிகாரத்தின் அடையாளமாகிவிட்ட Tiananmen Square. ஜனநாயகம் கேட்டு மிலிட்டரி டாங்க்குகளால் கூண்டோடு நசுக்கப்பட்ட, கணக்கிடப்படாத இளைஞர்கள், கம்யூனிச சரித்திரத்தில் கரும்புள்ளியாகக் கரைந்ததை நினைவூட்டும் ஒரு இடம்.
Temple of Heaven ஒரு பரந்து விரிந்த இடத்தில் இருந்தது. சுமார் 100 மீ. வரை நீண்டு வளைந்த சுவரின் ஒரு ஓரத்தில் மெதுவாகப் பேசினாலும், சுவரின் மறுகோடியில் எதிரொலியாகக் கேட்கிறது. Great architects! அங்கே கவர்ந்த விஷயம் சுற்றிலும் உள்ள பூங்காவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விதவிதமான உடற்பயிற்சியில் மிகச் சுறுசுருப்பாக ஈடுபட்டிருந்தது. காலால் உதைத்து (”எத்தி”?)விளையாடும் ஒருவித shuttle cock படு சிரத்தையாக, திறமையாக ஆடுகிறார்கள். நாங்களும் ஆடிப் பார்த்தோம். வேடிக்கை பார்த்த ஒரு சைனாப்பெண் கம்பெனி கொடுப்பதற்காக கொஞ்ச நேரம் எங்களுடன் ஆடி, “இதுகள் தேறாது” என்பதைச் சொல்லாமல் சென்றாள். Beijingகில் மிஸ் பண்ணக்கூடாத இடம்.
டூர் பேக்கேஜில் லோக்கல் மக்கள் வசிக்கும் ஒரு வீட்டுக்குப் போவதும் இருந்தது. கிட்டத்தட்ட ஜெய்லானித்தெரு மாதிரி இருந்த தெருவில் ஒரு சின்ன வீட்டிற்கு சைக்கிள் ரிக்ஷாவில் போய் அந்த குடும்பத்தினருடன் சிறுது நேரம் உரையாடல். தெருவில் நம் ஊரில் கிரிக்கெட் ஆடுவது போல் சிறுவர்கள் ஷட்டில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
சைனாவில் கவர்ந்த இன்னொரு விஷயம் -Chinese food. இந்தியாவில் காரம், மசாலா சேர்ந்து நமக்கேற்ற மாதிரி இருப்பது போல், ஜப்பானில் மொழுக்கென்று இவர்களுக்கேற்றார்போல் இருக்கும் சைன உணவு, நிஜத்தில் இவ்வளவு காரம் என்பதை யூகிக்கவில்லை. தெருவோரக் கடைகளில் ’தேள் வறுவல்’ கிடைக்கும் என்று Beijing போய் வந்த இந்திய நண்பர்கள் சொன்னார்கள். பார்க்கவில்லை. ” நாய்க்கறி ஸ்பெஷல்” என்று ஒரு ரெஸ்ட்ராண்ட் விளம்பரம் போர்டு வைத்திருந்தது. ரொம்பவும் பாப்புலரான Beijing Duck அவ்வளவு ருசிக்கவில்லை. ”ஆமை சாப்பிடப் போகலாமா?” என்றபோது *ஐயோ பாவம். So sad....* என்று மதுவும் ஷிபுவும் மறுத்துவிட்டனர். (Office Business trip-ல் ஒருமுறை வந்திருந்த போது மூன்று பேராகச் சேர்ந்து “ஆமை” சாப்பிட்டோம். தண்ணீருக்குள் உயிரோடு ஆமை இருந்த ஒரு கண்ணாடித் தொட்டியைக் கொண்டுவந்து காட்டி, “இது தான் உங்களுக்கு உணவாகப் போகிறது” என்று எடுத்துச் சென்றார்கள் என்பதைச் சொல்லியிருந்தேன்).
சைனாவின் cost of living பளிச்சென்று மனதில் படுகிறது. Beijing Duck சாப்பிடப்போனால் 100 யுவான் (600 ரூபாய்) வரை ஆகும் இடத்திற்குப் பக்கத்திலேயே ஏஸி ரெஸ்ட்ராண்டில் 5-6 யுவானுக்கு (30-36 ரூபாய்) fried riceம் நான் வெஜ்ஜும் சாப்பிட முடிகிறது. (மும்பை போல?) டாக்ஸியில் இரவு 10 மனிக்குமேல் 20 நிமிடம் பயணித்து ஹோட்டல் திரும்பினால் 12 யுவான் (72 ரூபாய்). Rolex முதல் Gucci வரை போலிகளை சட்டமீறல் பயமின்றி பொது மார்க்கெட்டில் கூவிக் கூவி விற்கிறார்கள். “ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏமாறும் தருணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புத்திசாலித்தனங்கள், கவனங்கள் தளர்ந்து ஏமாறும் தருணங்கள்...” என்ற சுஜாதாவின் கூற்றுப்படி, நானும் Sony 32 GB Memory Stick ஒன்று வாங்கினேன் -அது 1 GB கூடத் தேறாது என்று மார்க்கெட்டை விட்டு வெளியேறும் முன்பே இன்னொரு கடைக்காரி சிரிக்காமல் சொன்னாள்.
ஜப்பானின் ஒரு டிராவெல்ஸ் மூலம் செய்த பேக்கேஜ் டூர் என்பதால் ஏர்போர்ட்டில் இறங்கியதிலிருந்து திரும்புகையில் இமிக்ரேஷன் வரை கூடவே வந்து பார்த்துக்கொண்டார்கள். இல்லையென்றால் ஆங்கிலம் சுத்தமாகச் செல்லுபடியாகாத ஊரில் கஷ்டம் தான். Beijingகில் இருந்த 4 நாட்களிலும் கேட்ட ஒரே ஆங்கில வார்த்தை -”Sir, money, money..." என்று ஹோட்டலுக்கு அருகில் பின்னலேயே கையேந்தி வந்த சிறுமிகள். Wang Fu Jing என்ற ஷாப்பிங்கிற்குப் பிரசித்தமான இடத்தில் இருக்கும் மிகப் பெரிய, ஆங்கிலப் புத்தகங்கள் விற்கும் கடையில் கூட "Welcome to Come Back Again" என்று எழுதியிருந்தது. Chinglish!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment