Oct 3, 2009

புதன்கிழமை


ஹிந்திப் படங்கள் பக்கம் நான் போகத் துணிவதில்லை -மொழிப் பிரச்சனையால். பையனும் பொண்ணும் DVDயில் முழுக்க முழுக்க சப்-டைட்டில் பார்த்தே ஹிந்திப் பிரியர்களாகி விட்டார்கள். கடைசியாக ’ஓம் ஷாந்தி ஓம்’ பார்த்திருந்தேன்....

சமீபத்தில் ‘உன்னைப்போல் ஒருவன்’ பார்த்தேன். பார்த்ததும் அசந்து ஹிந்தி ஒரிஜினலைத் தேடி Wednesday ஐயும் முழுசாக ரசித்தேன். சமயத்தில் ஹிந்தியில் என்னமாய்ப் படம் எடுத்து விடுகிறார்கள்!

”புதன்கிழமை” ஒரு தெளிவான, தீர்மானமான படம். (கமல் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, தமிழில் உடனே எடுக்கும் அளவுக்கு). காதல் காட்சிகள், தனியாக காமெடி டிராக், சண்டைக்காட்சிகள், தாய்-மகன் சென்டிமென்ட், அரசியல், ஊழல், பழிவாங்கல் இத்யாதிகள் ஏதுமில்லாமல்.... எடுத்துக்கொண்ட கதைக் கருவில் இருந்து துளியும் ’அங்கே, இங்கே’ சிதறாமல் சீராக, ஆனால் அதிவேகமாகச் செல்லும் கதை. பாடல் ஏதுமில்லாமல் ரொமான்ஸ் இல்லாமல் (ஹீரோயினே இல்லாமல்!) இத்தனை வேகமாக கதை சொன்ன டைரக்டருக்கு (நீரஜ் பாண்டே) இது முதல் படமென்பது ஆச்சரியம்.

Stupid common man ஒருவன், தீவிரவாதிகள் சிலரைக் கிட்டத்தட்ட அவர்கள் வழியிலேயே ‘கதையை முடிக்கும்’ சின்ன கதைதான். நஸிருதீன் ஷா (’ஹே ராமி’ல் சில நிமிடங்களே காந்தியாக வந்து கலக்கிய நஸிருதீன் ஷா தான் நான் கடைசியாகப் பார்த்தது) அந்த ‘ஆம் ஆத்மி’ ரோலுக்கு கன கச்சிதம். ஆரம்ப காட்சிகளின் நிதானத்திலும, தீவிரவாதி என்று நாம் சந்தேகிக்கும்போதும், “நான் ஒரு சாதாரண பொது ஜனம் ஐயா!” என்கும் போதும் ......சினிமாத்தனம் இல்லாத சீரியஸ் வசனங்களைத் தீர்மானமாகப் பேசும் அபாரமான நடிகர்! சில காட்சிகள்: http://www.youtube.com/watch?v=29KOx9jJEnc&hl=ja (தமிழில் கமல் ‘ஆம் ஆத்மி’ ரோலுக்குப் பொருந்தவில்லை -ஏதோ ஐ.ஐ.டி. புரொஃபஸர் ’லுக்’ தான் இருந்தது!).

கதையில் இன்னொரு சிறப்பான அம்சம் -துடிப்பான, இளம் போலீஸ் ஆபீஸர்களைப் பார்ப்பது. அதில் ஒருவர் அவ்வப்போது இளம் மனைவியுடன் செல்ஃபோனில் பேசிக்கொள்ளும் மிகச் சாதாரண உரையாடல்கள் ஒரு அழகான கவிதை! (தமிழில் அந்த மனைவியையும் குழந்தையையும் கொல்லாமல் விட்டார்களே!).

கடைசியில் காய்கறிப் பையைத் தூக்கியபடி மொட்டை மாடியிலிருந்து இறங்கி வரும் நஸிருதீன் ஷாவும் அவரைத் தேடும் போலீஸ் ஆபீஸரும் (அனுபம் கேர்) கை குலுக்குவதுடன் கவித்துவமாக முடிகிறது. நிறைவான காரக்டர்களை வைத்து நிறைவாகச் சொல்லப்பட்டிருக்கும் கதை.
.

0 comments:

Post a Comment