Oct 23, 2009

சில்க்


சமீபத்தில் பார்த்த தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி: 1947க்கு முந்தைய காலத்தைக் காட்டும்போது ஒரு கிராமத்தில் முதல்முறையாகக் கார் வருவதைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாய் ஓடுகிறார்கள். அதிக பட்சம் மாட்டு வண்டி மட்டுமே பயணத்திற்கென்று இருந்த அந்தக் காலங்களில் ‘மோட்டார் கார்’ பார்க்க மக்கள் ஓடியது வியப்பில்லைதான்.


நாம் எதையாவது பார்க்க ஓடியிருக்கிறோமா...? யோசித்தேன்.

கால்குலேட்டர், டிவி, விடியோ காமெரா, கம்ப்யூட்டர், செல்ஃபோன் எல்லாமே கொஞ்சம், கொஞ்சமா நம் வாழ்க்கையில் ’சைலண்ட்டாக’ நுழைந்தன. கால்குலேட்டர்கள் நாம் கிண்டியில் நுழைவதற்கு 7-8 வருஷத்திற்கு முன் இல்லை -என் மாமா ஸ்லைட் ரூல் ஒன்றை உபயோகித்ததைப் பார்த்திருக்கிறேன்.

”டிவி பார்ப்பது” என்பது நான் முதன் முதல் சென்னைக்கு (பட்டணம் பார்க்க?) வந்தபோது என் ’பிளான்’களில் ஒன்று. (மற்றொன்று LIC கட்டடத்தைப் பார்த்துவிடுவது). 1978-ல் (கிண்டிக்கு ஒரு வருஷம் முன்) சென்னையில் இறங்கியபோது 'சர், சர்’ரென்று அங்குமிங்கும் பறக்கும் கார்களும், சிவப்புநிற பல்லவன்களும் என்னைக் கதிகலங்க வைத்தன. (இப்போ யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது -அது மாருதி கூட வராத காலம். 100cc பைக்குகளும் ஒன்றுகூட வந்திருக்கவில்லை; Yesdi என்றொரு பைக் தான் ரொம்ப ஸ்டைலிஷ் அப்போ. புல்லட் பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகளுக்கும், அப்புறம் தூத்துக்குடிப் பக்கம் காலில் செருப்பு இல்லாமல் வேஷ்டியை உயர்த்திக் கட்டிய நா(ட்)டார்களுக்கும் மட்டுமே. மூன்றாவதாக இருந்த ராஜ்தூத் unimpressive).

டிவி பார்க்க அமிஞ்சிக்கரையிலிருந்து தி.நகரில் இன்னொரு சித்தப்பா வீட்டிற்குப் போனது நினைவில் இருக்கிறது. கறுப்பு வெள்ளை டிவி. ஒரேஒரு சானலில் வாரம் ஒரேஒரு தடவை மட்டும் வருவது பெரும்பாலும் ‘டப்பா’ படம். நான் முதலில் பார்த்தது ‘தாய் சொல்லைத் தட்டாதே’ (அல்லது ‘தாய்க்குப் பின்தாரம்’ அல்லது ‘தாயைக் காத்த தனயன்’ இப்படி ஏதோ ஒன்று; ‘தாய்’ நிச்சயம் இருந்தார்).

அப்புறம் கிண்டி ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமைகளில் ஷோபனா ரவியின் புன்னகையைத் தொடர்ந்து வரும் ‘ஒலியும் ஒளியும்’ பார்த்து விசிலடிக்காத நாட்களே இல்லை. (”டிவியில் எல்லா நிகழ்ச்சியிலும் தான் ஒலி-ஒளி ரெண்டும் இருக்கிறது. இதற்கு மட்டும் ஏன் இந்தப் பெயர்?” என்று யாரோ -பகலவன்?- கேட்டதும் நினைவிருக்கிறது). வாரம் அரைமணி நேரம் மட்டும் டிவியில் பாடல்கள்!

டிவி முதல் முதல் பார்க்க தி.நகர் போனதுபோல், கலர் டிவி பார்க்க எல்லோரும் கூடியிருந்தது ஹாஸ்டலில். 1982-ல் இந்திரா காந்தி புண்ணியத்தில் Asiad டில்லியில் நடந்தபோது, முதல் முதல் கலர் டெலிகாஸ்ட் வந்து, மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

(என் பசங்களிடம் இதையெல்லாம் சொன்னால் என்னை ஏதோ கற்கால மனிதன் போல ‘லுக்கு’ விடுதுங்க! கம்ப்யூட்டரும் PS-II (or was it III?) இல்லாத காலத்தை அவர்களால் கற்பனை கூடப் பண்ணமுடியவில்லை).

பின்குறிப்பு: நான் முதலில் சொன்ன காட்சி இடம்பெற்ற படம் “காஞ்சிவரம்” -சென்ற வருஷம் ‘நேஷனல் அவார்ட்” வாங்கி, ஹீரோ பிரகாஷ் ராஜுக்கும் சிறந்த நடிகர் கிடைத்த படம். “எல்லோரும் தான் சின்னச் சின்ன தப்பு செய்யுறாங்க; எனக்கு மட்டும் ஏன் இந்தத் தண்டனை?” என்று ஒரு கட்டத்தில் புலம்பும் ஒரு சராசரி மனிதனின் பாசாங்கில்லாத, கொஞ்சமும் மிகைப்படுத்தாத, சினிமாத்தனம் இல்லாத கதை.  தமிழ் கூறும் நல்லுலகத்தின் ரசனையை மீறிய படம்.  பிரியதர்ஷனின் டைரக்‌ஷனில் ஏதோ பெங்காலி படம் பார்ப்பதுபோல் உணர்வு.

படத்தைப் பார்ப்பதற்கும் பெங்காலில் இருந்துதான் யாராவது வரவேண்டும் போல -நிஜத்திற்கு மிக அருகில் வருவதால் தமிழகத்தில் இந்தப் படத்தைப் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். (தீபிகா அப்பாவிற்கு என் ரசனை பற்றி எப்பவும் ஒரு கலக்கம், ஒரு பயம் உண்டு! “மாப்பிள்ளை விரும்பிக் கேட்கும் படங்களின் டிவிடியைக் கேட்டால், கடைக்காரனே நக்கலாச் சிரிக்கிறான் ’இதையும் வாங்குறதுக்கு ஆள் இருக்குதே’ என்று” . அப்படிப்பட்ட படங்களில் ஒன்று இது).

0 comments:

Post a Comment