Nov 2, 2009

இனி “காஞ்சிவரம்”

(( எல்லாம் சரி, அது என்ன தலைப்பு (”சில்க்”)?
பகலவன் சொன்னபடி, ”காஞ்சிவரம்” பற்றி எழுதணும் என்ற உந்துதலே அந்த மெயிலுக்குக் முதல் காரணம். ”பட்டு” என்று தலைப்பிட நினைத்தது மருவி, ‘சில்க்’ ஆகிவிட்டது. மற்றபடி “சந்தை தொழில் நுட்பம்” (என்ன தமிழாக்கம், AJB!), "நேத்து ராத்திரி.... யம்...மா” சமாசாரங்கள் இல்லை.



”காஞ்சிவரம்” ஆரம்பித்ததும் கவனம் கலையாமல் நான் பார்க்க முடிந்த படம். தமிழில் கூட இப்படிப் படம் எடுக்க ஆள் இருப்பது ஆச்சர்யம். அதெப்படி கதையில் அத்தனை கதாபாத்திரங்களும் நிஜமாகத் தெரிகிறார்கள்! பிரகாஷ் ராஜ் பாத்திரம் மனதில் ஒட்டுவதற்குக் காரணம் அவன் மனைவி-மகள் மேல் உள்ள ஆசையில் செய்யும் ’பைசா’ பெறாத தவறுகள். ”யார் தான் செய்யவில்லை?” என்று நொந்து புலம்பி அவன் நம்மில் ஒருவனாகிறான். மனைவிக்குப் பட்டுச் சேலை வாங்க வழியில்லாமல், மகளுக்காவது வாங்க வேண்டும் என்று திருட ஆரம்பித்து, தொழிலாளர் போராட்டத்திலிருந்து ‘பல்டி’ அடித்து..... சுலபத்தில் ‘சந்தர்ப்பவாதி’யாகத் தெரிந்திருப்பான். டைரக்டரின் மிகச் சிரத்தையான கதை அமைப்பால் அவன் மீது இரக்கமே வருகிறது.

கிராமத்து இளம் மனைவியுடன் காதலை டைரக்டர் சன்னமாகக் காட்டியிருக்கிறார். “நான் துரோகியானதும், திருடனானதும் இதற்குத் தானே...” என்று ஒரு கட்டத்தில் புலம்புகிறவன், கடைசியில் மனநிலை தவறுவது சில வினாடிகளில் ஒரு சின்னக் காட்சியில் தெரிகிறது -பின்னணி வசனம், ஒரு வரிப் பாடல், ஆயிரம் வயலின்கள் இவை ஏதும் இல்லாமல்.

நெசவாளர்கள் மத்தியில் யூனியன் பிறந்தது கதையின் போக்கில் வருகிறது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவுடன் நாமும் ‘நமது’ பிரிட்டிஷ் அரசும் கைகோர்த்துக்கொள்ளும் வரை கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தார்கள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ’தோழர்’களை நக்ஸலைட் ரேஞ்சுக்கு நடத்தியிருக்கிறர்கள்!

தன் பையனை (வழக்கத்திற்கு மாறாக) பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கும் இன்னொரு நெசவாளி பேசும் ஒரு வசனம் வருகிறது: “வாழ்க்கை பூரா இந்தத் தறியோட போராடும் வாழ்க்கை நம்மோடு போகட்டும்.. நம்ம பிள்ளைகளுக்காவது வேண்டாம்னு தான்...”. குலையன்கரிசலில் என் தாத்தாவின் டயலாக் அது! வாழ்வின் பெரும்பகுதியில் மாட்டுவண்டி ஓட்டி மழைக்காக ஏங்கி விவசாயம் பார்த்து 5ம், 10மாகச் சேர்த்து.... ஒரு வைராக்கியத்தில் தன் இரண்டு பையன்களை (என் அப்பாவும் ஒருவர்) சென்னையில் பச்சையப்பா கல்லூரியில் படிக்க வைத்தார். அந்த நெசவாளி டயலாக்கின் ‘உணர்வு’களை என்னால் முழுதாகப் புரிய முடிந்தது....

படத்தின் வலை-இணைப்புக்கு நன்றி, பகல்ஸ். தீபிகா நெட்டில் படங்களைப் பிடிப்பதில் கில்லாடி என்று சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தை உன் போலவே ‘எந்தக் காலத்திலேயோ’ நெட்டில் பார்த்துவிட்டதாகச் சொன்னாள். ‘என்னடா இது... படம் இவ்வளவு ஆமை வேகமாப் போவுது.... பகலவனும் சுபாகரும் உடனே இதைப் பற்றிப் புல்லரிச்சுடுவாங்களே.... ஏன் இன்னும் பேசக் காணோம்?”, என்று யோசித்து (:-), இன்னும் ஆராய்ந்து, படம் தியேட்டரில் வெளிவராமலே நெட்டில் வந்துவிட்டதைக் கண்டுபிடித்ததாகச் சொன்னாள்.

0 comments:

Post a Comment