Nov 5, 2009

Memory

கிண்டி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டது....



பழைய சம்பவங்களை எழுதும்போது மக்கள் என் மெமரி பற்றி வியந்தால் நான் அவசரமாக மறுத்து விடுவேன். எல்லோருக்கும் சிலபல விஷயங்கள் ஏதோ காரணத்தால் எங்கேயோ, ’எதற்கோ’ ரெகார்ட் ஆகிவிடுகின்றன, அவ்வளவே.




ஆர்வமுள்ள விஷயங்கள் மனதில் எளிதில் நிலைத்துவிடுகின்றன. இங்கே நண்பன் ஒருவனின் farewell பார்ட்டியில் “இவன் ஐஷ்வர்யா பிரியன்...” என்று நான் சொல்லிவைக்க, அவன் “அடுத்த வாரம் இதே நாள் ஐஷின் பிறந்த நாள்...” என்றான். (மறு நிமிடம் அவன் மனைவி வெகுண்டு “ஹேய்... உனக்கு என் பிறந்த நாளே அப்பப்ப மறந்து போகும்; அவ மட்டும் நினைவிருக்கா?” என்றதும் மௌனமானான். (“இதிலே முழுப் பேரையும் சொல்லாமல் ஐஷாம், ஐஷ்..... ஏதோ அத்தை பெண் மாதிரி”).

ஒரே சம்பவத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் மனதில் தங்கிவிடுகிறது. கலர் டிவி விஷயத்திலேயே, மெஸ்ஸில் கூட்டமாக ஆவலுடன் உட்கார்ந்து ‘திடும்’என்று கலரில் பார்த்ததும் விசிலடித்ததும் எனக்கு நினைவில் இருக்கிறது. டிவி முதலில் ‘மக்கர்’ பண்ணியதும், (அது Solidaire டிவி என்பதும்), நம்மில் ஒருவன் ‘மாஜிக்’ கை பட்டவுடன் சரியானதும் நினைவில்லை. ’தயா’வுக்கு அந்த மாஜிக் ஆசாமி சஞ்சீவி என்றும், ஐசக்கிற்கு “இல்லை; அவன் நம் ஸீனியர்” என்பது மட்டுமில்லாமல் அவன் கண்ணாடி போட்டிருந்ததும் ஞாபகம்.

’முதல்’அனுபவம் கொஞ்சம் அதிகமாகவே நினைவில் நிற்கும். டிவி.ரவிக்கு மதுரையின் முதல் இரட்டை விசிறி விமானம் வாயில் நுழையாத பெயருடன் பதிந்துவிட்டது. TKPயின் மனதின் எங்கோ ஒரு மூலையில் டிவியின் முதல் படம் ரெகார்ட் ஆகியிருப்பது -பத்மினிப் ’பாட்டி’யின் மீதான பிரியத்தால்? (அப்புறம் TKP, இந்த *Mr.Subahar* என்று எழுதற வேலையெல்லாம் நம்ப கையிலே வேணாம், என்னா?!).

செந்திலுக்கு ஆரம்ப காலங்களின் ‘குரங்கு பெடல்’ சைக்கிள் மறக்கவில்லை. நானும் 8-ம் வகுப்பில் என் முதல் சைக்கிள் வாங்கும் வரை -வாங்கிய பின்னும் கொஞ்ச நாள் -குரங்கு பெடல் தான். “ரொம்ப நாளைக்கு வரணும்; பையன் வளரும் வயசு” என்று அப்போல்லாம் வீட்டில் எல்லாமே ’எக்ஸ்ட்ரா லார்ஜ்’ சைஸில் தான் வாங்குவார்கள். (இந்த long term approach-சினாலேயே பள்ளி காலங்களில் எனக்கு பெரும்பாலும் ‘தொள தொள’ ட்ரவுசர் தான்) அப்படி வந்த BSA சைக்கிளை நான் படு சிரத்தையாக க்ளீன் செய்வதை என் தங்கை கொஞ்சம் பொறாமையுடன் தான் பார்ப்பாள் (”வரட்டும், வரட்டும், எனக்கும் ஒரு சைக்கிள் வரட்டும்....”) சைக்கிள் கேரியரில் அவள் புத்தகைத்தையோ பையையோ வைத்துவிட்டால் அன்று யுத்தம் தான். பின்னாளில் நான் மிகவும் ரசித்து ஏகப்பட்ட ஆப்ஷன்களுடன் ட்வின் டோர் 3000cc Toyota Solara வாங்கியபோதும், அந்த BSA சைக்கிளின் போது இருந்த ‘கிக்’ வரவில்லை.

’தர்ம சங்கடங்களும்’ எளிதில் மறப்பதில்லை. (பகல், சூரி: அது ஏன் “தர்ம” சங்கடம்?). தயாவின் டிவி ரிப்பேர் அனுபவம் எனக்கும் உண்டு. சித்தப்பா வீட்டில் டிவி பார்த்த முன்னொரு நாளில் டிவி மக்கர் செய்ய, அங்கே கூடியிருந்த அக்கம்பக்கத்து இல்லத்தரசிகளின் ’திருப்பார்வை’ என்மேல் பட்டது. நான் இன்ஜினியரிங் படிப்பதால் எனக்கு ‘தலையெல்லாம் மூளை; உடம்பெல்லாம் அறிவு; எதையும் இவன் சரி செய்வான்’ என்று நினைப்பு அவர்களுக்கு. (நம் ‘திருமதி’கள் பலருக்கும் கூட அப்படித்தான் நினைப்பு -திருமணம் வரை!) “நான் படிப்பது mechanical engineering -ஆக்கும்” என்று ’டெக்னிகலா’கப் பதில் சொல்லி நழுவி விட்டேன்.

நம் எல்லோருக்கும் ஆசிரியர்/ஆசிரியை ஒருவராவது ஏதாவது காரணத்தால் மனதில் தங்கியிருப்பார் என்று நிச்சயமாகச் சொல்லலாம். சென்னப்பனுக்கு 10-ம் வகுப்பு வாத்தியார் பெயரும் உயரமும் (எத்தனை அங்குலம் என்பது வரை) நினைவிருப்பது அவர் மீனம்பாக்கத்தில் விமானம் பார்க்க அழைத்துச் சென்றதாலோ, வீட்டில் போண்டா கொடுத்ததாலோ மட்டும் அல்ல; சென்னைக்கு மாறிவந்தபோது சப்போர்ட்டிவ்வாக இருந்ததாலும் என்பதைத் தெரிகிறோம். அண்மையில் மறைந்துவிட்ட Fr. Arockiyasamy எனக்கு ஹைஸ்கூலில் அப்படி அமைந்தவர். எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியானபோது ’நல்லா படிக்கும் பசங்க’ கொஞ்சபேர் ‘கேக்’ ஒன்று வாங்கிக்கொண்டு அவரைப் பார்த்து, லயோலா, செயிண்ட் ஜோசப் என்று என் நண்பர்கள் அடுத்த ‘படி’ பற்றி அவரிடம் சொல்ல, அவரோ வகுப்பில் ஃபெயிலான ஒரேயொரு மாணவனைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசினார். கடைசி மாதங்களில் அவனுக்கும் ஒரு சிலருக்கும் தனி கோச்சிங் எடுத்தது பற்றிப் பேசியவர், “I don't know how he 'managed' to fail" என்றார். அந்த வார்த்தைப் பிரயோகத்தினல், அதில் தெரிந்த ஆதங்கத்தினால் 31 வருஷத்திற்கு அப்புறமும் என் பிள்ளைகளிடம் அவரைப் பற்றிப் பேசமுடிகிறது.

அடிக்கடி இல்லாவிட்டலும் அவ்வப்போதாவது குடும்பத்தாருடன் பழைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அவை காலம் கடக்கின்றன. ” நம்ம காலேஜ் பசங்களில் என்னைப்போலவே ‘நினைத்தாலே இனிக்கும்’ 17 முறை (விடியோ இல்லாத காலத்தில்) தியேட்டருக்கு சென்றே பார்த்தவர்கள் யார்?” என்று கேட்டால் தீபிகா உடனே “டிவி.ரவி மற்றும் அரவிந்த்” என்று சொல்லிவிடுவாள், back-up memory போல. சுபாராணியின் கணவர் கிண்டி-25 சந்திப்பில் தன் மனைவி அந்நாட்களில் ”கிண்டி Trio-க்களில் ஒருவர்” என்று நட்புடன் மேடையில் சொல்லும்போது (பார்க்க: கிண்டி-25 DVD) சுபாராணி வீட்டின் ’அரட்டை’ நமக்குப் புரிகிறது. அதை சுபாராணியின் பெண் அதே மேடையில் ஆமோதிக்கும்போது, விஷயம் அடுத்த தலைமுறைக்கும் சுலபமாகச் சென்று விடுவது தெரிகிறது.

மேல் சொன்ன எந்தவகையிலும் சேராத சில விஷயங்களும் ஏனோ மறப்பதில்லை. ”நம்ம ‘செட்’டில் மார்ச்-5 -ல் பிறந்த நாள் வரும் இருவர் யார்?” என்று கேட்டால் நம்மில் 90 சதவீதம் பேர் சரியான விடையை ‘சட்’ டென்று சொல்வார்கள்.....!

0 comments:

Post a Comment