Mar 10, 2010

Kikujiro

Kikujiro -பகல் சொன்ன ஜப்பானியப் படத்தை நானும் பார்த்தேன். ஹீரோவைப் பார்த்ததும் ஆச்சரியம்- இந்த ஆள் -Beat Takeshi `லோகல் டிவியில் ‘செமை’யாகப் பாப்புலர்; டிவி ஹோஸ்ட்; ஒரு கமீடியன். தகேஷியை ஒரு ஸீரியஸ் படத்தில் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆச்சரியம்’ படத்தின் டைரக்டர் Takeshi Kitano வும் படத்தின் ஹீரோவும் ஒருவரே! (டைட்டிலில் Cast : Beat Takeshi என்றும் Direction -Takeshi Kitano என்றும் காட்டுகிறார்கள். இரண்டும் ஒருவரே).

Kikujiro -ஒரு எளிமையான கதை. ஒரு முறிந்த கல்யாணத்தால் பாட்டியிடம் வளரும் சின்னஞ்சிறு பையன் (வயது 8 அல்லது 9) தொலை தூரத்தில் இருக்கும் தன் அம்மாவைப் பார்க்க விரும்ப, பாட்டிக்குத் தெரிந்த ஒரு பக்கத்து வீட்டு ஆளுடன் (தகேஷி) பயணிக்கிறான். அந்த ஆள்- தமிழ் சினிமா ஹீரோ போல் இல்லாமல் கோணங்கித் தனமாக ஏதாவது செய்து எப்பவும் வம்பை விலை கொடுத்து வாங்கியபடி காலந்தள்ளும் ஒரு வேலை வெட்டியில்லாத, சூதாடும் சோம்பேறி. பையனும் ஹீரோவும் வழி நெடுக சந்திக்கும் அனுபவங்களே படத்தின் பெரும்பகுதி.

கடைசியில் பையனின் அம்மாவின் வீட்டை நெருங்குகையில், அங்கே அம்மா மற்றொரு கணவன், மற்றொரு குடும்பம், மற்றொரு சிறுமி என்று ஒரு அழகான ‘மற்றொரு’ வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதைப் பார்க்கிறார்கள். ஒரு சின்ன மௌனத்திற்குப் பின் ஹீரோ பையனிடம் வந்து “உங்க அம்மா எங்கேயோ வீடுமாறிப் போய் விட்டாராம்; இது வேறொரு பெண்..” என்று பொய் சொல்கிறான். ஒருசில நிமிடங்கள் மட்டும் வரும் இந்தக் காட்சி, பையனின் இயலாமையை, வெறுமையை, நியாமற்ற இழப்பை ’சட்’டென்று நமக்கு உணர்த்துகிறது.

ஊருக்குத் திரும்புகையில் தகேஷி முதியோர் இல்லத்தில் இருக்கும் தன் தாயாரைப் பார்க்க விரும்பி அங்கு செல்கிறான். அந்த வயோதிகத் தாயாரும் இளமையில் மற்றொரு வாழ்வைத் தேடி, இவனைப் பிரிந்தவள் என்று தெரிகிறது. முதியோர் இல்ல ஹாலில் தாயைப் பார்க்கிறான்; ஆனால் ஏதும் பேசாமல் திரும்பிவிடுகிறான்.

”இன்னொரு நாள் உங்க அம்மாவைத் தேடிப் போகலாம், என்ன?” என்று தகேஷி அந்தப் பையனிடம் சொல்வதில் படம் முடிகிறது. சிக்கல் இல்லாத, எளிமையான கதை. படம் முழுவதும் பையனின் ஏக்கத்தைப் பற்றியே காட்டிக்கொண்டிராமல் சந்திக்க நேரும் அனுபவங்கள் பற்றிச் சொல்வது ஜப்பானிய ஸ்டைல். (அம்மாவைப் ’பார்த்த’ பின் ஊருக்குத் திரும்பும்போதும் தொடரும் சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம்).

இருந்தும், சிறுவர்/சிறுமியரின் தவிப்பை மிகையில்லாமல் காட்டும்போது ஒரு நேரடித் தாக்கத்தை உணர்கிறோம். Pursuit of Happiness போல. ”கன்னத்தில் முத்தமிட்டால்” போல.

0 comments:

Post a Comment