Mar 19, 2010

"You're ordinarily Extradinary"

பெங்கால்' பக்கம் புத்திசாலிப் பெண்கள் கொஞ்சம் ஜாஸ்தி போல..! அதெப்படி, அவங்க மட்டும் இவ்வளவு ஆணித்தரமாக, தெளிவாக, அழகாக, நேரிடையாகப் பேசறாங்க? தாகூரில் ஆரம்பித்து சத்யஜித் ரே (அல்லது ‘ராய்’), மிருனாள் சென், அருந்ததிராய், அமார்தியா சென் வரை பொதுவாகவே பெங்கால்காரங்களுக்கு ஜீன் கொஞ்சம் வேற மாதிரி. சமீபத்தில் விகடனில் வெளிவந்த நந்திதா தாஸின் பேட்டியிலிருந்து excerpts:
--------------------------------------------------------------------------------------------------------------------

நந்திதா தாஸ்... சர்வதேச அரங்கில் இந்திய சினிமாவின் பிராண்ட் அம்பாஸடர்களில் ஒருவர். கோவைக்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் பேராசிரியைபோல் இருக்கிறார். 'காபி டைம்' சந்திப்பில் இருந்து...
''அறிமுக இயக்குநர் முயற்சியிலேயே செவாலியே விருது... வாழ்த்துக்கள்!''

''வாவ்... தமிழ்நாடு வரை தெரிஞ்சுவெச்சிருக்கீங்க. சந்தோஷம்! ஓ.கே. செவாலியே ஜெயிச்ச 'ஃபிராக்' படத்தைப் பொறுத்தவரை, 'ஒன் ஃபைன் மார்னிங் எனக்கு அந்தக் கதை தோணுச்சு'ன்னு சொல்ல மாட்டேன். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து அனுபவிச்ச வேதனைகளைத்தான் திரையில் காட்டியிருக்கேன். 'ஃபிராக்' படம் வன்முறைக் காட்சிகளே இல்லாத வன்முறைப் படம்னு ஒரு விமர்சனம் இருக்கு. ஆமாம்... அது நிஜம்தான். நந்திதா தாஸ் எனும் தனி மனுஷிக்கு வன்முறையைத் திரையில் பார்க்கப் பிடிக்காது. அதனால்தான் வன்முறைகளைக் காட்சிப்படுத்தாமல், அதற்குப் பின் மக்களின் வாழ்க்கை எந்தவிதத்தில் பாதிக்கப்பட்டது என்பதைக் காட்டியிருந்தேன்.

''அடிப்படையில் நீங்கள் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ஆனால், இன்று சினிமாவில் தியேட்டர் பின்னணியில் இருந்து வரும் ஹீரோயின்கள் கிட்டத்தட்ட இல்லையே?''

''கசப்பாக இருந்தாலும் உண்மை! இப்போதைய டிரெண்டுக்கு ஹீரோயின் பார்க்க அழகா, கவர்ந்து இழுக்கக்கூடிய அம்சங்களுடன் இருந்தால் போதும். திறமையெல்லாம் தேவையே இல்லை. கல்லூரி, பல்கலைக்கழகங்கள்னு நான் சந்திக்கிற பெண்கள் எல்லாம் என்கிட்ட தவறாம கேக்குற ஒரே கேள்வி, 'மாநிறமா இருந்தும் எப்படி ஒரு ஹீரோயினாக உங்களால் ஜெயிக்க முடிந்தது?' ஆரம்ப நாட்களில் சாதாரண கேள்வியாகத்தான் இதை எதிர்கொண்டேன். ஆனால், ஆழ்ந்து யோசிச்சப்பதான் நம்ம பெண்களின் ஆழ்மனத்தில் படிஞ்சு கிடக்கிற தாழ்வு மனப்பான்மை, 'அழகு' பற்றிய அவர்களின் மனப் பிம்பம்பற்றித் தெரியவந்தது. ரொம்ப வருத்தமா இருக்கு. மிருணாள் சென் என்னைப் பார்க்கும்போது, 'யூ ஆர் ஆர்டினரிலி எக்ஸ்ட்ரா ஆர்டினரி'ன்னு ஆச்சர்யப்படுவார். என் சரும நிறம் நினைவுக்கு வரும்போது எல்லாம், இதைத்தான் நினைச்சுக்குவேன். கறுப்பாக இருப்பதால் தன்னைத் தாழ்வாக நினைத்துக்கொள்ளும் அத்தனை பெண்களுமே எக்ஸ்ட்ரா ஆர்டினரிதான்!

சினிமாவில் பெண்கள் பங்குபத்திக் கேட்டீங்கள்ல. ம்ம்ம்... என்ன சொல்ல, சினிமா ஆணாதிக்கத் துறை. 50 வயசுக்கு மேலயும் ஹீரோ தன் மகள் வயசு பெண்ணுடன் டூயட் பாடலாம். ஆனால், 25 வயதைத் தாண்டிட்டால், ஹீரோயின்கள் 'ஆன்ட்டி'கள்தான். அப்படியும் தயக்கங்களை உதறி சினிமாவில் போராடிட்டு இருக்கும் பெண்களுக்கு என் மெசேஜ் ஒண்ணே ஒண்ணுதான்... 'உண்மையின் மீது நம்பிக்கை வையுங்கள். அது உங்கள் தைரியத்தைப் பன்மடங்காக்கும்!''

'' 'சில்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா'வின் தலைவர் நீங்கள். இந்திய சினிமாவில் குழந்தைகள் சினிமாக்களுக்கான தளம் இருக்கா?''
''ஏதோ ஒரு மூலையில் சின்னச் சின்ன முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. ஆனா, குழந்தைகள் சினிமாக்களுக்கான முயற்சிகள் முறையாக இன்னும் துவக்கப்படவே இல்லை. இன்னும் பெரியவர்களுக்கான சினிமாவைத்தான் குழந்தைகளும் பார்த்துட்டு இருக்காங்க. Right to Entertainment for Children என்ற விஷயத்தில் நாம் இன்னும் கவனம் செலுத்தணும்!''

''தமிழ் சினிமாவை மறந்துட்டீங்களா?''
''தமிழ் சினிமாதான் என்னை மறந்திருச்சு. 'அழகி', 'கன்னத்தில் முத்தமிட்டால்' படங்களுக்கு அப்புறம் நல்ல வாய்ப்புகள் வரலையே. எனக்கு எப்போதும் மொழி ஒரு தடையாக இருந்தது இல்லை. கதைதான் முக்கியம்!''

0 comments:

Post a Comment