Jun 12, 2009

டோக்யோவில் ‘சிவகாசி’


சென்ற வாரம் ’ஆபீஸ் விஷயமாக’ டோக்கியோ போய் வந்ததில்:

  • Shinkansen-ல் (bullet train) ஜன்னலை மூடி விட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது “ய்ய்ய்யா....” என்ற ஜப்பானியக் குரல் கேட்டு விழித்து, ஏதோ தோன்ற ஜன்னலைத் திறந்து வெளியில் பார்த்தேன் -Mt.Fuji யின் அபாரமான காட்சி! (இத்தனை வருஷங்கள் புல்லட் டிரெய்னில் போகும்போதும் mt.Fuji தோன்றும் நேரம் கேட்டுத் தெரிந்து, ஜன்னல் அருகே கழுத்து வலிக்க கையில் காமெராவுடன் எட்டிப்பார்த்தும் எப்போதும் கரு மேகமும் மழையும் தான் தெரிந்ததே தவிர, Mt.Fuji கண்ணில் பட்டதே இல்லை). இந்தமுறை சட்டென்று கண்முன் விரிந்த Mt.Fuji அதட்டலான தோற்றத்துடன், அதற்கே உரிய தனி அழகுடன் இருந்தது. மலை உச்சியில் மட்டும் பனி மூடி, கார்டுகளிலும் ஃபோட்டோக்களிலும் தெரிவது போல் அச்சாக அதே கம்பீரத்துடன் நின்று, மிக அருகில் தெரிகிறது. (Murphy Law வின் படி, இந்தமுறை நான் காமெரா எடுத்து வரவில்லை; மேலே புகைப்படம் ’நெட்’டில் சுட்டது). இந்த ஆகஸ்டில் எப்படியும் Mt.Fuji யில் hike போய்விட வேண்டும்.

  • அலுவலக வேலை முடிந்து, பிரபாக்கா அத்தானை ஷின் யோகோஹாமா ஸ்டேஷனில் சுமார் 18 வருஷங்களுக்கு அப்புறம் சந்தித்தேன். கையசைத்தவாறே அவரைப் பார்க்கையில் “இப்பத்தான் சிவகாசி ஆளப் பார்த்த மாதிரி இருக்குது...” என்றார். (இவ்வளவுக்கும் நான் ஃபுல் சூட்டில் இருந்தேன் -ஆபீஸ் டூர் என்பதால்!). என்னடா இது, தமிழ் நாட்டிலேயே ஏர்போர்ட்டிலேயும் ரயில்வே ஸ்டேஷனிலும் நம்மிடம் தமிழில் பேசாமல் ஹிந்தியில் பேசறாங்க; இதென்ன “டோக்யோவில் சிவகாசி?” என்று நினைத்து “என்ன அத்தான், நான் மீசையைக் கூட எடுத்து இருக்கேன்.... ” என்றேன். “அதில்லை; உன் கையில் இருந்த தங்க மோதிரம் பளிச் சென்று கண்ணில் பட்டது” என்றார்! (நல்லவேளை, கழுத்தில் இருந்த தங்க செயின் படவில்லை!).


  • Swine Flu சீசனாகையால் என்கூட வந்த என் பாஸும் இன்னொரு கலீகும் (அவரும் ஜப்பானியரே) mask அணிந்து வந்திருந்தனர். நாங்கள் இருக்கும் ஓஸகா பக்கம் பல Flu கேஸ்கள் தெரிந்து, பள்ளிகள் மூடி, எங்கள் ஆபீஸில் அங்கங்கே hand-sanitizer வைத்து, மெயின் கேட் பக்கம் காரில் வருவோருக்கெல்லாம் வாய்க்குள் தெர்மாமீட்டர் சொருகி காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். டோக்கியோ பக்கம் Flu கேஸ் ஒன்றும் இல்லை என்பதால் அவ்வளவு கெடுபிடி இல்லை என்று நியூஸ் பேப்பரில் படித்திருந்தேன். இவர்களுகுத் தெரிந்திருக்கவில்லை போலும். டோக்கியோ வீதிகளிலும் ’முகமூடி’கள நான் பார்க்கவில்லை. “நியூஸ் பேப்பரில் அப்படிப் போட்டிருந்ததே... பின்னே ஏன் maask?” என்று எனக்குத் தெரிந்த வெளி உலக அறிவை அவர்களுக்கு எடுத்துக்காட்டினேன். என் பாஸின் பதில் அசர வைத்தது: “டோக்கியோ நமக்கு safe தான். ஆனால் நாம் ஓஸாகாவிலிருந்து வருகிறதால் நம்மிடமிருந்து flu அவர்களுக்குப் பரவிவிடுமோ என்ற anxiety இங்கே டோக்கியோவில் நாம் வந்திருக்கும் ஆபீஸில் இருக்கும் பலருக்கும் இருக்கும். அவர்கள் anxiety ஐக் குறைக்கவே இந்த mask".

    ஜப்பானியர்கள் பனைமரத்தடியில் நின்று பால் குடிக்க நேர்ந்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்தேன்....

0 comments:

Post a Comment