Jun 9, 2009

Welcome back, வேதாளம்!



தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் தோளில் சுமந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிச் சொன்ன கதைகளில் (35-வருடத்திற்கு முன் ‘அம்புலிமாமா’வில் படித்தது) என் மனதில் தங்கி விட்ட கதை:


கடும் தவமிருந்து விஷேச வரம் பெற்ற மூன்று இளைஞர்கள் காட்டுவழி நடக்கையில் ஒரு அழகான பெண் சிலையைப் பார்க்கிறார்கள். “இந்த சிலை நிஜ பெண்ணாக இருந்தால் எவ்வளவு அழகாக இருப்பாள்!” என்று வியக்கிறார்கள். முதலாமவன் தன் தவ வலிமையினால் அந்த சிலைக்கு உயிரூட்டி நிஜ பெண்ணாக மாற்றுகிறான். இரண்டாமவன் தன் தவத்தால் சற்றும் யோசியாமல் ஆடைகள் வரவழைத்து அந்தப் பெண்ணிற்கு அணிவிக்கிறான். மூன்றாமவன் தவம் செய்து, அழகிய நகைகளும் அணிகலன்களும் வரவழைத்து அவளுக்கு அழகூட்டுகிறான். வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேட்ட கேள்வி: ”மூன்று இளைஞர்களுமே அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். அவளை மணமுடிக்கும் தகுதி அந்த மூவரில் யாருக்கு அதிகம் இருக்கிறது?”


விக்ரமாதித்தன் பதில் வேதாளத்தைத் திருப்திப்படுத்தியதும், அதனால் அவன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறாமல் தப்பியதும் புராண கதை. ஆனால் வேதாளத்தின் கேள்வியை நான் பல பேரிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்ட போது யாருமே விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்திற்கும் தெரிந்திருந்த சரியான விடை சொல்லவில்லை. ஆச்சரியம்!


(விடை இந்தப் பக்கத்திலேயே இருக்கிறது, வேதாளத்தின் கண்ணிற்கு மட்டும் தெரியும்படி. கண்டு பிடியுங்கள். கண்டுபிடித்தவர்கள் எதற்கும் முதுகுக்குப் பின்னால் ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொள்ளுங்கள்).
விடை: உயிர் கொடுத்தவன் தந்தையாகிறான். ஆடையால் மானம் காத்தவன் சகோதரன். நகைகளால் அவள் அழகை மெருகூட்டி ரசிப்பவனே கணவனாகும் தகுதி பெறுகிறான்.

0 comments:

Post a Comment