Oct 12, 2011

மூன்று படங்கள்

"ருத்தி வீரன்" ஹிட்டாகி, தமிழ்நாடே 'ஆ, ஊ'' என்று அதைப் புல்லரித்ததில் இருந்து எனக்கு புது தமிழ்ப்படங்கள் -அதுவும் ஹிட் படங்கள்- என்றாலே கொஞ்சம் அலர்ஜி. அதிலும், ஒரு தாடி வெச்ச கும்பல் எடுக்கும் படம் பக்கமே நான் தலை வைத்துப் படுப்பதில்லை. கமல், பாலா கூட ஒரு தரமான படம் கொடுத்தால் அடுத்து உடனே 'கழநி'ப் பானக்குள் காலை விட்டுவிடுகிறார்கள். ("மன்மதன் அம்பு" "அவன்-இவன்") சமீபத்தில் வழக்கமான மாசாலா'விலிருந்து சற்றே மாறுபட்டு வெளியான 3 ஹிட் படங்கள் அந்த டைப் இல்லை.

எங்கேயும் எப்போதும்: சுஜாதா வின் சிறுகதை ஒன்றின் ஆரம்பத்தில் -முதல் பாரவில் - ஊட்டியில் (அல்லது கொடைக்கானலில்) படகில் போகும் தேனிலவு தம்பதிகள் "உனக்கு நீச்சல் தெரியுமா?" என்று பேசிக்கொண்டிருக்கு்ம் போது படகிலிருந்து தவறி ஏரியில் விழுந்து கணவன் இறந்து விடுகிறான். அடுத்த பாராவிலிருந்து, கதை ஃப்ளாஷ் பாக்கில் அவர்கள் என்னவெல்லாம் பேசிக் கொண்டு வந்தார்கள் என்பதைச் சொல்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகும் மரணத்தை அறியாமல், அவர்கள் பேசும் சின்னச் சின்ன விஷயங்கள் வாசகர்களை 'த்சூ' கொட்ட வைக்கின்றன. கதையின் கடைசி வரி "அதற்கப்புறம் தான் அவன் கேட்டான், "உனக்கு நீச்சல் தெரியுமா?" என்று முடிகிறது.

எ.எ. முதல் ஸீனில் ஒரு பஸ் விபத்தைக் காட்டிவிட்டு அதன் பயணிகளின் பிண்ணனிக் கதைகளை சிறுகச் சிறுகச் சொல்கிறது. நடு நடுவே விபத்திற்கு அப்புறம் நடக்கும் காட்சிகளையும் காட்டி... விபத்தின் விளைவுகளை நிஜத்திற்கு அருகில் நாம் உணரமுடிகிறது. நல்ல முயற்சி.

முரண்: "விபத்துக்கள் அங்கங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றன" என்று சொல்லி தனக்கு வேண்டாதவர்களை 'விபத்து' மூலம் தீர்த்து விடும் ஒரு பணக்கார இளைஞனுடன் 'நல்ல பிள்ளை' சேரனுக்கு ஏற்படும் அனுபவங்கள் பற்றிய கதை. 1950களில் வந்த Strangers on the train ன் காப்பி என்று சொல்கிறார்கள். இருந்தும் விறுவிறுப்பாக, சுவராஸ்யமாக செல்கிறது. சுஜாதாவின் "எதையும் ஒருமுறை" யை நினைவூட்டும் ஆரம்பம் இருந்தாலும், கதை ரூட் மாறுகிறது

வாகை சூட வா: என்னை மிகவும் கவர்ந்தது. செங்கல் சூளையில் வேலை செய்யும் சிறுவர், சிறுமிகளைப் பள்ளிக்கூடம் வர முயற்சி செய்யும் 1966ம் ஆண்டின் ஒரு இளம் வாத்தியாரின் அனுபவங்கள் பற்றிய, மிக எளிதான, நேர்மையான கதை. கவிதை போல் சொல்லியிருக்கிறார்கள்.

அதிலும் "சார்..சார்" என்று சொல்லி வாத்தியாரைக் காதலிக்கும் அந்தக் கிராமத்துப் பெண், அபாரம்! ("சாரக் காத்து வீசும்போது, 'சாரை'ப் பார்த்துப் பேசும்போது, சாரைப் பாம்பு போல நெஞ்சு ஊருதே.." போன்ற எளிமையான,  கிராமத்து வாசனையுடன் பாடல்கள்) கிளைமாக்ஸில் வாத்தியாரை செங்கல் சூளைக்குள் வைத்து எரித்து, அந்தப் பெண்ணை "காத்திருக்கிறாள், இந்தக் கண்மணி" என்று வசனத்துடன் முடித்துவிடுவார்களோ என்று பயந்து போய்ப் பார்த்ததாக தீபிகா சொன்னாள். நல்ல வேளை, முடிவு நெகடிவ் ஆக இல்லை.  ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி

மூன்று படங்களிலுமே குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக், தாய்-மகன் சென்டிமென்ட், காமெடி என்ற பெயரில் வீணாய்ப் போன சொதப்பல் காட்சிகள் ஏதும் இன்றி, சொல்ல வந்ததை சுலபமாக, சுவராஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். முக்கியமாக, அப்பட்டமான காப்பி இல்லமல் ஒரிஜினல்கள். மூன்றிலுமே புதுமுகங்கள் 'செம்மை'யாக நடித்திருக்கின்றனர். மெகா பட்ஜெட், பிரபல ஹீரோ-ஹீரோயின் இல்லாமல் கதையையும் காரக்டர்களையும் மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படங்கள். மூன்றுமே புதிய டைரக்டர்களின் முதல் படங்கள். அடுத்த படத்தில் சாயம் வெளுக்காமல் இருப்பார்களாக!

0 comments:

Post a Comment