Dec 23, 2011

அரை நூற்றாண்டுப் புன்னகை மன்னன்! -2

குறைவிலா வாழ்க்கைக் களமிறங்கி இந்நாள்
அரைசதம் வென்றவனே ஆற்றல் மிகும்-உன்
பெருமைகள் ஊர்சொல்லும் பல்லாண்டு - நண்பா
முருகேசா வாழ்கவே நன்று..!

முருகேசனின் 50-வது பிறந்த நாளுக்கு வந்திருந்த மிகச் சிறப்பான வாழ்த்து இதுவே! பகலவனின் எளிய தமிழில் மரபிலக்கிணத்தை மீறாமல் ஒரு வெண்பா. கலக்கிட்டே, மச்சி!

கல்லூரி காலத்திலேயே பகலவனுக்குக் கவிதை மேலிருந்த காதல் தெரிந்தவர்களுக்கு “குறைவிலா வாழ்க்கை...” வியப்பாக இருக்காது. நேரிசை, இன்னிசை வெண்பா என்று மரபுக் கவிதையிலும் பகல் முன்பே முயன்றிருக்கலாம், எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சுஜாதாவைத் தீவிரமாக வாசித்ததாலும் மரபில் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். சுஜாதா திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார் –மரபுக் கவிதையே அவருக்குப் பிடித்த வகை என்று. தொல்காப்பியம் முதல் ஹைக்கூ வரையிலும் நேற்று வந்த புதுக்கவிதையிலும் நல்லவற்றை அடையாளம் காட்டியவர், வெண்பாவை சிலாகிக்கிறார்; மரபிலக்கணம், சொற்சிக்கனம் என்ற கட்டுப்பாடுகள் இருந்தும் உலகத்தரத்தைத் தொடும் புறநானூற்றுப் பாடல்கள் பற்றி தனி புத்தகமே எழுதியிருக்கிறார். “மரபுக் கவிதை வழக்கில் இல்லாமல் போனதிற்குக் காரணம் அவற்றில் பரவலாகத் தெரியும் மிகைப்படுத்தலே” என்கிறார். (கடினமான, அன்றாட வழக்கத்தில் இல்லாத வார்த்தைப் பிரயோகங்கள் என்பதை ஏனோ சொல்லவில்லை). அனிதா(வை), இனிதா(மதம்), வனிதா(வும்), மனிதா(பிமானம்) என்று அனுதின வார்த்தைகளை வைத்து, இலக்கணம் பிறழாமல் வெண்பா எழுதிக் கலாய்க்கிறார்.

கலவனின் வெண்பா முதலில் அதன் எளிமையால் என்னைக் கவர்ந்த்து. (“ஊர் சொல்லும் பல்லாண்டு” என்கிற போது மட்டும் கொஞ்சம் சங்க காலம் தெரிகிறது); ‘நாமும் முயன்றால் என்ன?” என்று என்னைத் தூண்டியது. வெண்பாவின் சின்ன விதிகளைக் கொஞ்சம் தூசு தட்டி, முடிந்தவரை ‘லோக்கல் தமிழி’ல் முயன்றிருக்கிறேன். பகல், சூரி போன்ற கவியரசுகளுக்கு: அடியேன் படைப்பில் ‘வார்த்தைத் தேடல்’ உங்களுக்குத் தெரியலாம். சொற்குற்றம், பொருட்குற்றம் இருப்பின் நெற்றிக்கண்ணைத் திறந்துவிட வேண்டாம். சுட்டிக் காட்டுங்கள். (பகலுக்கு ஒரு கேள்வி: இரண்டாம் அடியில் வரும் தனிச்சொல், அந்த அடியின் முதற்சீருடன் எதுகையில் இருக்க வேண்டியதில்லையா?)

முதலில் குரு வந்தனமாக பகலுக்கு ஒரு 'ஷொட்டு' (நேரிசை வெண்பாவில்):

சட்டென்று கேட்டால் மரபில் கவிமழை
சிட்டாகப் பாடும் பகலவா -எட்டில்
மசியாத வெண்பாவை இன்றுநீ ஐம்பதில்
தூசிதட்டி பட்டை கெளப்பு!

அடுத்து, இப்போதைய நாயகன் முருகேசன் பற்றி. குறள் வெண்பாவையும் விட்டு வைப்பானேன்?

ஐம்பதிலும் வாரா நிதானம்  நண்பனிடம்
டீன்ஏஜில் கண்டு வியப்பு.
*******************************

படித்தது ஐந்தாண்டு, மனதி லிடம்
பிடித்தது ஆயுள் வரை.
*******************************

பதினேழில் சந்தித்தோம்; கற்றோம், இருந்தும்
எதிலோ கழிந்தது தேடல் - மனதில்
ஒருநாள் விரியும் நினைவில் மலரும்
முருகேசன் புன்முகம் கண்டு.
***********************************

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்ட படியால், குறள் வெண்பாவிலேயே, முருகேசனக் கொஞ்சம் சீண்டலாம்:

பூவான உள்ளம் உனக்கு முருகேசா,
__வான் எனவும்பேர் உண்டு.

முருகேசன் அடிக்க வருமுன், ஓடிவிடுகிறேன்...!

1 comments:

Anonymous said...

ஓடியதால் பிடிக்க முடியவில்லை, பாராட்ட.....

Post a Comment