அவள் விகடன் (27-3-2009) இதழில் பெண்கள் வேலைக்குப் போவதை ஆதரித்து தீபிகாவின் கட்டுரை "ஜப்பானிலிருந்து தீபிகா சுபாகர்" என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. கட்டுரையில் வந்திருக்கும் ஃபோட்டோ Kyushu தீவின் Queen of Hot springs என்று சொல்லப்படும் Beppu வில் எடுத்தது. ஒரிஜினல் எழுத்தை ‘அவள் விகடன்’ குழு ரொம்பவே ‘மென்படுத்தி’யுள்ளது! விளைவு -தீபிகாவின் திருநெல்வேலி ஸ்டைல் ஆணித்தரமான கருத்துக்கள் Kansai-ben-ல் அடக்கத்துடன்
வந்திருக்கின்றன :-)
-------------------------------------------------------------------------------------------------
27-3-2009 "அவள் விகடன்"
வீட்டை கவனித்துக் கொள்வதற்காக பெண்கள் வேலையை விடுவதைப் பற்றி இந்த ஆண்டில் விவாதிப்பதே நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது என்பதே என் தாழ்மையான கருத்து!
இல்லத்தரசியாக இருந்து ஒரு இக்கட்டான சூழ்நிலையில், மேற்படிப்பு படித்து, இன்று வெளிநாட்டில் பணியாற்றும் பெண் நான். அன்று என் அம்மா, மாமியார் உதவியதால்தான், இன்று என் குழந்தைகள் இருவரும் வளர்ந்து பெரியவர்களாகி நன்றாக இருக்கிறார்கள்.
மனைவி, வீட்டோடு இருந்தால் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், வேலைக்குப் போகும் பெண்ணுக்கு கணவரும் குடும்பமும் உதவியாக இருந்தால், அதை விட நன்றாகவே குழந்தைகளை வளர்க்க முடியும்.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு என் அனுபவபூர்வமான டிப்ஸ் சிலவற்றை இங்கே தந்திருக்கிறேன்....
'குழந்தைகளை வளர்ப்பதற்காக' என்று உங்கள் அம்மாவையோ மாமியாரையோ கூப்பிடாதீர்கள். அது எத்தனை சுயநலமானது! திருமணமானது முதலே அவர்களில் யாருடனாவது இருக்க முடியும் எனில், அதைச் செய்யுங்கள். அவர்கள் மீது உண்மையான அன்பும் கரிசனையும் காட்டுங்கள். அப்படிப்பட்ட சூழல் உங்கள் குழந்தை வளர்வதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
பெரியவர்கள் உடன் இருக்க வசதிப்படாவிட்டால், வீட்டில் ஆள் வைத்துப் பார்த்துக் கொள்வதைக் காட்டிலும் காப்பகத்தில் விடுவதே சிறந்தது.
காப்பகத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சின்னச் சின்ன அசௌகரியங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள். குழந்தை அழுதால் பயப்படாதீர்கள். பள்ளிக்கூடம் போவதற்குக்கூட எல்லாக் குழந்தைகளும் அழத்தான் செய்யும். அதற்காக பள்ளிக்கு அனுப்பாமலா இருக்கிறோம்?
''இப்படி பணத்துக்காக ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?'' என்று நீங்கள் கேட்கலாம். சம்பாதிக்க முடியும் எனில், வேலைக்குச் செல்வதில் தவறொன்றுமில்லை. உங்களுடையது குறைந்த வருமானமாகவே இருந்தாலும் அது குடும்ப நிலையை நிச்சயம் மேம்படுத்தும். வேலையும் சம்பளமும் தன்னம்பிக்கையை ஊட்டும். வேலை தருகிற நிறைவும் தன்னம்பிக்கையும் வருமானத்தைக் காட்டிலும் உயர்ந்தது.
இல்லத்தரசியைக் காட்டிலும் அதிகமான அளவு கணவனுக்கு விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் வேலை பார்க்கிற பெண். தன்னையும் குழந்தையையும் மட்டுமே பார்த்துக் கொள்கிற பெண்ணின் கணவனை விட அதிகமான அளவில் மனைவிக்கு விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் ஆண். 'அலுவலகத்தில் கணவரோ / மனைவியோ டென்ஷன் மிகுந்த சூழலில் இருந்திருக்கலாம்' என்கிற எண்ணம் இருவருக்கும் எப்போதுமே இருக்க வேண்டும்.
கணவன் - மனைவி இருவரும் அடுத்தவர் முன்னிலையில்.. அது இரு தரப்புப் பெற்றோராகவே இருந்தாலும்.. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவே கூடாது. வேலை தரும் நிதிச் சுதந்திரத்தில் திமிரும் கர்வமும் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.
வேலைக்குச் செல்லும் வீடுகளில் பிரச்னை வருவதற்குக் காரணமே, மனைவியின் வேலைகளை கணவர் பகிர்ந்து கொள்ளாததுதான். நீங்கள் சமையல் செய்தால், அவர் பாத்திரங்கள் கழுவட்டும். நீங்கள் குழந்தையுடன் இருக்கும் நேரத்தில் அவர் வீட்டை சுத்தப்படுத்தட்டும். இப்படி வேலைகளை சமமாகப் பிரித்துக் கொண்டாலே அலுப்புத் தெரியாது.
வேலைக்குப் போவதால் ஏற்படும் சிரமங்களை யோசிக்காமல், அது தரும் தன்னம்பிக்கை, பலன்களை அலசுங்கள். நாளைக்கு உங்கள் மகளும் படித்து பெரிய வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதித்தால்.. அது உங்களுக்கு எத்தனை சந்தோஷத்தைத் தரும்? அதில், நம் குழந்தைக்கு நாமே முன்னோடியாக இருப்போமே!
-- ஜப்பானிலிருந்து தீபிகா சுபாகர்.
.
Mar 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வேலையை பகிரிந்து கொள்ளுதல் கேட்பதற்கு நன்றாக உள்ளது நடைமுறையில் சாத்தியமா? சாத்தியமே அனால் எல்ல நாட்களிலும் சத்தியம் இல்லை.வேலை பளு அதிகம் உள்ள சமயங்களில் வேலையை பகிரிந்து கொள்ள இயலாது - இது இருபாலருக்கும் சேர்த்துதான் சொல்லுகிறேன்.
கணவன் தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பதும், மனைவி அந்த சுதந்திரத்தை துஷ் பிரயோகம் செய்யாமல் இருப்பதும் தான் வெற்றிகரமான குடும்ப வாழ்கையின் ரஹசியம்
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கண்டிப்பாக தேவை
//கணவன் தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பதும்//
கணவன் "கொடுப்பதா"...? திருமணத்திற்கு முன் அவளிக்கிருந்த சுதந்திரத்தைப் பறிக்காமலோ, தடுக்காமலோ இருந்தாலே போதும்!
வாழ்த்துகள்.
Post a Comment