Mar 8, 2009

Kamaraj -தலைவன் இரு(ந்திரு)க்கிறான்

விருதுநகர் தெப்பக்குளம்; குளத்தைச் சுற்றிலும் கடைவீதிகள். மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் (காமராஜரின் தாயார்) படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் தேசபக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே முருகன் படம்.

கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட் கார்ந்தார். மூச்சுத் திணறியது. ''வாங்கய்யா'' என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் 'ஸ்விச்'சைப் போட்டார்.
''தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்...''
''நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக்கொள்கிறேன்.''

''சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?'' என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார். ''நல்லாச் சொன்னீங்கய்யா... அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! 'பட்டணம் பாக்கணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத் தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு'ம்பான்..!''

''மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?''
''அனுப்பறான். பொடிக்கடை தனக் கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்...''

''எவ்வளவு பணம் அனுப்பறாரு?''
''120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க... அப்ப இங்கே வந்திருந்தான். 'என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா'ன்னு கேட்டேன். 'நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா..?''

''இப்படியரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்'' என்றதும், அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன. ''ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?''

''கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தாரை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்து விட்டு நிற்கிறேனே!''
---------------------------------------------------------------------------
1961-ல் வெளியான இந்த பேட்டியை விகடன் சமீபத்தில் மறு-வெளியீட்டிருந்தது.
இப்படி ஒரு தலைவன் நம்மிடையே, நம் காலத்தில் வாழ்ந்திருக்கிறான்...

7 comments:

Udanx said...
This comment has been removed by the author.
Udanx said...

உண்மைதான். பெருந்தலைவரை போல ஒரு அரசியல் தலைவர் இனிமேல் வரபோவது இல்லை. நாணயம் நேர்மை நல்லாட்சி இவற்றிற்கு எல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கியவர். தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரச்செய்வோம் என்பது இயலாத ஒன்று

Deepika's Subahar said...

You're right, Udhankar. விகடனில் ஒரு வாசகர் எழுதியதுபோல், “இப்படியொரு தாயும், இப்படியொரு தலைவனும் நம் தலைமுறையில் நாம் இனி பார்க்கப்போவதில்லை”. நீங்கள் சொல்லும் ‘நாணயம், நேர்மை’ எல்லாம் காமராஜரைக் குறித்த மிகச் சாதாரணமான வார்த்தைகள். என்னைக் கேட்டால், “மக்களாட்சி” என்பதற்கு நம் வாழ்நாளில் கண்ட ஒரே ஒரு உதாரணம் அவர். அவரே கடைசி உதாரணமாகப் போனது, நம் தகுதியின்மையைக் காட்டுகிறது. வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னபடி, "In democracy, we get the Government that we deserve".

ttpian said...

கோபாலபுரத்திலும்,தோட்டத்திலும் பனம்!
காமராஜர் வீட்டில்?

Deepika's Subahar said...

ttpian -நன்றி. மு.க. வீட்டில் கொள்ளுப்பேரன், பேத்தி வரை கோடிகளில் சேர்த்துவிட்டார்கள் என்றால் அதற்கு நாமே பொறுப்பு. That's what we probably deserve now!

Aravindan from detroit :-) said...

Deepika Subahar:
Awesome. It is amazing. This blog is great. I like this article about Kamaraj. I am no sure if we will get another leader like Kamaraj.

Deepika's Subahar said...

அர்விந்த் -நன்றி. காமராஜ் என்ற தலைவரை இந்தியாவிற்குத் தந்ததற்காக, உங்க ஊர்க்காரர்கள் -விருதுநகர்க்காரர்கள் -நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இருந்தும், சரித்திரம் விருதுநகரை மன்னிக்காது -அதே காமராஜைத் தேர்தலில் தோற்கடித்ததற்காக.

Post a Comment