எங்கெங்கும் ஹனாமி!
இரவில் ஸகுரா (நான் தீபிகாவைச் சொல்லவில்லை! :-)
சென்ற வாரம் வருடந்தோறும் நடப்பது போல் நாடுமுழுவதும் ஜப்பான் ஸகுரா மலரைக் கொண்டாடியது. வருஷத்தில் ஒரேயொறு வாரம் மட்டும் மரத்தின் இலைகள் ஏதுமின்றி மரம் முழுவதும் வெள்ளைப் பூக்களாகக் காட்சி அளிக்கும் ஸகுரா, சரியாகக் குளிர் முடிந்து ஸ்ப்ரிங் (இளவேனிற்காலம்?) தொடங்கும்போது மலர்கின்றது. ஒரே வாரம் தான்; பூக்கள் எல்லாம் இழந்து, மறுபடியும் வைரமுத்து எழுதிய “பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி போல” அடுத்த வருஷம் வரை மீண்டும் காத்திருக்கிறது. "வாழ்வது கொஞ்சகாலம் என்றாலும் சிறப்பாக, பூத்துக் குலுங்குவது போல வாழவேண்டும்" என்று வாழ்க்கையின் தத்துவத்தையே ஸகுரா தெரியப்படுத்துவதாக ஜப்பானியர்கள் இந்த மலர் வாரத்தை ரசிக்கின்றனர். ஸகுரா ஜப்பானின் தேசிய மலர்.
Hana-mi (பூ பார்த்தல்) என்றழைக்கப்படும் இந்த நிகழ்வின் போது ஸகுரா மரங்கள் இருக்கும் பார்க் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி, பிளாஸ்டிக் பாய் விரித்து அமர்ந்து.... வேறென்ன, சாப்பிடுகிறார்கள். காரோகே செட் கொண்டு வந்து பாடுவோரும் உண்டு. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தும், பெரும்பாலோர் சாப்பாட்டுடன் ’ஸாகே’ எனப்படும் உள்ளூர் தேவபானம் பருகியும், எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் இருப்பது ஜப்பானுக்கே உரிய மற்றுமொரு வியப்பான விஷயம். இரவில் ஸ்பெஷலாகப் போடப்பட்ட விளக்குகளின் வெளிச்சத்தில் ஸகுரா மரத்தடியில் இட்லி சாப்பிடுவது இன்னொரு ‘கிக்’- நாங்கள் மிஸ் பண்ணுவதில்லை.
முதல் முதல் இந்த முறை ஸகுரா தனிமையில் கழிந்தது. Himeji castle-ஐச் சுற்றிலும் இருக்கும் ஹனாமிக்கு மிகப் பாப்புலரான பூங்காவை வலம் வந்தபோது உலகமே ஜோடி-ஜோடியாக, அல்லது குடும்ப சகிதமாக இருந்தது (போல் தெரிந்தது). ’தனியாக யாரும் இருக்கிறார்களா?’ என்று தேடிப்பார்த்தேன்; இரண்டொரு ஸீனியர் சிட்டிஸன்’கள் கையில் AK-47 அளவில் காமெரா, காமெரா ஸ்டாண்ட், இத்யாதி ...தூக்கிக்கொண்டு தரைக்கு 4 மீட்டர் உயரத்தில் எதையோ உற்றுப்பார்த்து நடந்துகொண்டிருந்தனர். Professionals! இத்தனை கூட்டத்திற்கு நடுவிலும் தனியாக ஒரு இளம்பெண். ஆச்சரியத்தில் கிட்டப் போய்ப் பார்த்தால்...
ஹனாமி கூட்டத்தில்
தனிமையில் அவள்.
இல்லை,
நாய்க்குட்டியுடன்.
என்று ’சட்’டென்று ஒரு ஹைக்கு எழுதி, அவளை ஒரு ‘கிளிக்’கிட்டு, கூட்டத்தினுள் கலந்தேன். (ஹைக்கு இலக்கணம் தெரிந்தவர்கள் மன்னிக்கவும்).
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment