Apr 29, 2009

நற்றிணை, புறநானூறு, சுஜாதா

காயாங் குன்றத்து கொன்றை போல
மாமலைவிடரகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியலிரு விசும்பகம் புதையப் பாய்ப்
பெயல் தொடங்கினாலே பொய்ய வானம்
நிழல்திகழ் சுடர்த்தொடி நெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை அதெனதிர்
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குவாளே


மேலே பாடலில் ஒருவரி புரியவில்லை? எனக்கும் தான். கலவரப்படாதீர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தின் நற்றிணையில் வரும் இந்தப் பாடல் இன்றைய தேதியில் தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமே பிடிபடும்.

இப்போது இந்தப் பாடலை சுஜாதா எளிமைப் படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். “வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என்று முயற்சிக்காமல், பாடலின் சாரத்தை அழகு குன்றாமல் இன்றைய தமிழில் தந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டு, அத்துடன், பாடலின் சாரம் பற்றி ஒரு சின்ன அறிமுகமும் செய்கிறார் சுஜாதா: “வீடு திரும்பும் காதலன் தன் தேர்ப்பாகனிடம் சொல்லும் இந்தப் பாடல் இந்தக் காலத்து மாருதி டிரைவர்களுக்கும் பொருந்தும்”.

கருநீல மலர்மரங்களுக்கு இடையில்
சரக் கொன்றைகள் போல மின்னல் மின்னுகிறது
மலை விளிம்புகள் தெரிகின்றன
பெய்யாத மழை பெய்யத் தொடங்கிவிட்டது.
இருள் வருகிறது, இடி உருமுகிறது
இடையர்கள் குழல் ஊதத் துவங்கிவிட்டார்கள்
அவள் தங்கும் இடத்தை நோக்கிச் செல்கிறது மழை.
பயந்து போய் அழ ஆரம்பிப்பாள்
சீக்கிரம் போ!

சுஜாதாவின் எளிமை முயற்சியில் ’அந்தக் காட்சி’ -வீட்டில் தனிமையில் இருக்கும் தலைவியை நினைத்து, விரைந்து வீடு திரும்பத் துடிக்கும் தலைவன் மனநிலை- நமக்குக் கவிதையாக விரிகிறது. ஔவையார் எழுதியதாக நற்றிணையில் வரும் இந்தப் பாடலின் நடையை வைத்து, “ஔவையார் என்று அந்தக் காலத்தில் ஒருவருக்கு மேற்பட்டோர் இருந்திருக்க வேண்டும். இவர் நிச்சயம் ஆத்திச்சூடி எழுதிய ஔவையார் இல்லை” என்று சுஜாதா கருதுகிறார்.

சுஜாதாவின் ‘செல்ல’ வடிவமான ஹைக்குவில் இதே காட்சியைக் கொண்டுவர முயல்கிறேன்:

பெருமழை இடி மின்னல்
மின்வெட்டு எங்கும் இருள்
பயந்து போயிருப்பாள்.
சீக்கிரம் போம், டிரைவரே!

புறநானூற்றில் பாரி மகளிர் என்ற கவிதாயினி எழுதியதாக வரும் இன்னொரு கவிதை அவ்வளவு கரடுமுரடாக இல்லை.

“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர்
எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே”.

”உலக இலக்கிய அளவுக்குத் தமிழை உயர்த்தும் கவிதைகளில் ஒன்றா”க சுஜாதா வியக்கும் இந்தப் பாடலின் இன்றைய தமிழ்ப் படிவம் கீழே:

“அந்த மாதம் அந்த நிலவில்
அப்பா இருந்தார். கோட்டையும் இருந்தது.
இந்த மாதம் இந்த நிலவில்
வெல்லும் போர் முரசு மன்னர்கள்
கோட்டையைப் பறித்தார்கள்.
அப்பாவும் இல்லை”


போரின் தாக்கத்தை எளிமையாக ஆனால் ஆழமாகச் சொல்லும் கவிதை. இதில் வரும் “அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்” என்ற வரிகள் நமக்கு ஓரளவு பரிச்சயம்; கண்ணதாசனும் வைரமுத்துவும் வேறு சூழ்நிலைகளை விவரிக்கையில் காதலி பாடுவதாக இதே நிலவை எழுதுகின்றனர். ”அன்றொரு நாள் இதே நிலவில்... அவன் இருந்தான் என் அருகில்” (கண்ணதாசன்). “அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.... கொற்றைப் பொய்கை ஆடுகையில், ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா?” (வைரமுத்து -”இருவர்”).

”அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவு” கவிஞர்களைக் கவர்ந்ததைக் கவனித்து, அதை “கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்” படத்தில் எழுதியிருந்தார் சுஜாதா. நற்றிணையையும் புறநானூற்றையும் அவற்றின் கவித்துவத்தையும் நமக்குத் தெரியக் கொண்டுவந்து காட்டியதும் அவரே.

சு..ஜா..தா... What a Loss!

3 comments:

பகலவன் கிருஷ்ணமூர்த்தி said...

சுபாகர்,

நல்ல பதிப்பு. சுஜாதாவின் பாதிப்பும் கூட..!! :-) உன் ஹைக்கூ முயற்சிகளும் நன்றாக உள்ளன. உன் ஹைக்குவை இன்னும் எளிமைப் படுத்திப் பார்த்தேன். இப்படி (எல்லாம் ஒரு "உட்டாலக்கடி" தான்..!!):

மழை மின்னல் மின்வெட்டு -
தனிமை அச்சத்தில் அவள்
தவிப்பிருட்டில் அவன்..!!

-பகலவன்

Deepika's Subahar said...

"சுருக்கம்” நன்றாகவே இருக்கிறது, பகலவன்; இரண்டு பேரும் வேறுவேறு இடத்தில் இருப்பதைக் குறிக்கும் வகையில், கீழே தந்தபடி மேலும் சுருக்கலாமா?

மழை மின்னல் மின்வெட்டு -
பயந்து போயிருப்பாள்.
சீக்கிரம் போம், டிரைவரே!

பகலவன் கிருஷ்ணமூர்த்தி said...

இருவரும் வெவ்வேறு இடங்களில் இருப்பதை குறிப்பாகச் சொல்லவேண்டுமென்பதில்லை - அது எடுத்தாள்கை சம்பந்தப் பட்டது என்பது என் எண்ணம். நான் சொன்ன வரிகளில் கடைசி வரியில் "அவன்" என்பதற்கு பதில் "இவன்" என்று போட்டால் கூட தலைவனும் தலைவியும் வெவ்வேறு இடங்களில் இருப்பதாகத் தெரியும்..

இங்கு ருசிகரமான விஷயம் என்னவென்றால் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்கப் பாடல் கால ஓட்டத்தின் திரிபால் வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்படுவதுதான்..!

-பகலவன்

Post a Comment