Apr 21, 2009

இகேபானா (Ikebana)


’இகேபானா’ கண்காட்சிக்கெல்லாம் போகிற ஆள் இல்லை நான்.

இகேபானா (flower arrangement) ஜப்பானில் கலை என்று ஒதுங்கவும் முடியாமல், ஹாபி என்று லைட்டான விஷயமாகவும் இல்லாமல் கதம்பமாக இருக்கும் ஒரு கலாச்சாரம். விதவிதமான பூக்களைப் பீங்கான் தட்டிலோ, கோப்பையிலோ முறைப்படுத்தி அலங்கரித்து வைப்பதைத் தமிழில்“மலர் அலங்காரம்” அல்லது “பூந்தொகுப்பு” என்று மொழிபெயர்க்கலாம் ‘கதம்பம்’ தமிழின் நல்ல வார்த்தை; ஆனால் வேலைப்பாட்டைச் சிறப்பாகச் சொல்லாமல் நாரில் கோர்க்கப்படும் பூக்களையோ, விதவிதமான பூக்களின் கலவையையோ மட்டுமே குறிக்கப் பயன்படுகிறது. இகேபானா தமிழ் நாட்டில் இருந்திருந்தால் தமிழில் சரியான வார்த்தை கிடைத்திருக்கும்.

தீர்மானமாக ஜப்பானியர்கள் விடமறுக்கும் பழைய வழக்கங்களில் இகேபானாவும் ஒன்று. (நம்மூரின் கோலமும், கொலுவும் இந்த ”மரபு வழிக் கலை” யில் வரும் என்றாலும், இகேபானாவிற்கு அதிக முயற்சியும், நேர்த்தியும், கலைஉணர்வும் தேவை. இகேபானாவின் elegance நமக்கு ரொம்ப தூரம்). இகேபானாவிற்கென தனி கோச்சிங் இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் இகேபானவின் தேர்ச்சி, பெண்கள் திருமணமாவதற்கு ஒரு முன்தேவை (pre-requisite) அல்லது விரும்பக்கூடிய தகுதி (desirable qualification) யாக இருந்தது என்கிறார்கள். (நம்மூரில் இன்றும் சில மாமி வீட்டுப் பெண்பார்க்கும் படலத்தில் “பெண் நன்னாப் பாடுவாளோ இல்லியோ?” என்ற கேள்வி இருப்பது போல்). இப்போது பெரும்பாலும் பெண்களின் ஹாபி அல்லது அதற்கு ஒரு படி மேலே. ”கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை; ஆனால் தெரிந்திருந்தால் அது நிச்சயம் ஒரு ப்ளஸ் பாயிண்ட்” என்கிறாள், என்னுடன் வேலை செய்யும் சுகியுச்சி. "நான் கல்யாணம் ஆன புதிதில் இகேபானா ரொம்பவும் செய்வேன்; அம்மா கற்றுக்கொடுத்தது. இப்போ அவ்வளவா செய்யறது இல்லை...”

தீபிகா ஒரு கிளாஸ் போய், அங்கே இகேபானாவிற்கான ’தட்டு முட்டு’ சாமான்கள் எல்லாம் கொடுத்ததால், அவ்வப்போது எங்க வீட்டிலும் இகேபானா தலைகாட்டும். இகேபானா கோப்பைகளில் தண்ணீர் ஊற்றி, 2 வாரம் வரை ஒரு முறை தொகுத்ததைக் கெடாமல் வைத்திருக்க முடியும்.

அண்மையில் இகேபானா கண்காட்சி ஒன்றுக்கு complimentary ticket ஒன்று கிடைத்தது. ”sabishi-ne!” (தனியாக இருக்கியே, பாவம்) என்று இரக்கப்பட்டு தனக்கு வந்த டிக்கெட்டை எனக்குக் கொடுத்தாள், சுகியுச்சி. (“அவ ஏன் இரக்கப்படணும்?”). இடம்: Kobe Daimaru டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் மாடிகளில் ஒன்று. Daimaru ஜப்பானிலேயே மேல்தர, ‘ஜன்னல் ஷாப்பிங்’குக் கூட நான் போகத் தயங்கும் ஷாப்பிங் செண்டர். அங்கே நடக்கும் கண்காட்சி சனிக்கிழமை என்பதால் போனேன் -கொஞ்சம் பயந்தபடி தான். கண்காட்சி,

பயந்த மாதிரி இல்லாமல் எளிமையாக, நேர்த்தியாக இருந்தது. பூக்களின் கிளைகளை விதவிதமாக வளைத்து (அதன் செய்முறை எளிதல்ல), பல டிஸைன்களில் ஆனால் இயற்கையாகத் தோன்றும்படிச் செய்திருந்தனர். மாடர்ன் ஆர்ட் போலவும் சில இருந்தன. பெரும்பாலான தொகுப்புக்கள், ஒரிஜினல் வடிவம் சிதையாமல், செடியில் அன்றுதான் பூத்த அழகு குலையாமல் இருந்தன. இகேபானாவின் சிறப்பு, பூக்களின் இயற்கை எழில் கெடாமல் அதைத் தொகுப்பதில் இருக்கிறது வந்திருந்த பலர் மிக நுணுக்கமாகப் பார்த்தபடி, கண்ணாலேயே 100 மெகா பிக்செலில் படமெடுத்துக்கொண்டிருந்தனர். காமெராக்களில் இகேபானாவின் அழகைக் கொண்டுவருவது கடினமே. சில முயற்சிகள்:
















.
இகேபானா பூக்கள்

வளைந்தும் நொடிந்தும் நெளிந்தும்...
அழகாய்ப் பிறந்தால்
ஆபத்து தான்.

0 comments:

Post a Comment