சென்ற வருடம் இதே நாளில் (Feb-27) சுஜாதா மறைந்தார்.
அவர் மறைவு விட்டுச் சென்ற வெற்றிடம் -vacuum- இன்னும் அப்படியே இருக்கிறது. அவர் நடையின் வேகம், நவீனம் மறந்து, வறட்சியான, உயிரில்லாத தமிழ் எழுத்துக்களை மட்டுமே இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. விகடன் நெட்டில் முதலாவதாகப் படிக்க 'கற்றதும் பெற்றதும்' இல்லை. அதில் வரும் புறநானூற்று வீரமும் காதலும் இல்லை. தமிழைப் படிப்பதற்கே முன்னைப் போல் ஆர்வம் இல்லை.
சுஜாதாவின் நினைவில் அவருக்கு அஞ்சலியாக இன்று அவரது சில படைப்புக்களை திரும்பிப் பார்க்கலாம்.
'நகரத்'தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. குழந்தையின் நோயகுணமாக்க மதுரை ஆஸ்பத்திரி வரும் ஏழை கிராமத்துப்பெண், டாக்டரை ஒருமுறைமட்டும் பார்த்து, 'லேப்' அது, இது என்று அலைக்கழிக்கப்பட்டு, ஏழ்மையாலும் விவரம் தெரியாமலும் சமாளிக்கத் திராணியின்றி திரும்பிவிடுகிறாள். கொஞ்சம் பொறுப்பான டாக்டர் "எங்கேய்யா அந்தப் பொண்ணு? அந்தக்குழந்தை கேஸ் படு சீரியஸ்....உடனே அட்மிட் பண்ண எழுதியிருந்தேனே..." என்று தேடும்போது அந்தப்பெண் கிராமத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கிறாள்: "வா ராஜா... வீட்டுக்கப் போனதும் எல்லாம் சரியாயிடும்". படித்தவுடன் ஒருநிமிடம் கலங்க வைக்கும் கதை.
"ரேணுகா" -கம்பெனியில் பணம் கையாடல் செய்து சஸ்பென்ட் செய்யப்பட்ட தொழிலாளி யூனியன் அது, இது என்று மேலும் வம்புக்கு அலைய, அவன் மனைவி கைக்குழந்தையுடன் கணவனை வேலைக்கு சேர்த்துவிட்ட தன் மாமாவைப்பார்த்து அழுகிறாள். அவர் "கேஸ் ரொம்ப ஸ்டிராங்-மா அவன் மேலே... எதுக்கும் GM-ஐ ஒருமுறை பார்" என்கிறார். GM வீட்டில் கூர்க்காவிடம் அவள் கெஞ்சுவதைப் பார்த்து GM மனைவி அவளை உள்ளே விட்டு அவள் கதையைக்கேட்க, எல்லாம் சொல்லி அழுகிறாள். "அவர் செஞ்சது தப்புதாம்மா... இந்தவாட்டி அவரை மன்னிச்சு விட்டுருங்கம்மா.... " என்று காலில் விழுந்து கெஞ்சுகிறாள். மறுநாள் அவனைத் திரும்ப வேலைக்கு அழைக்கிறார்கள். வீட்டிற்குத்திரும்பும் கணவன் கொக்கரிக்கிறான்: "மேனேஜ்மென்ட் என்ன நினைச்சான் என்னை? யூனியனா கொக்கா? எச்சரிக்கை நோட்டிஸ் தரானாமில்ல..? அதையும் வாபஸ் வாங்க வைக்கிறேன்" என்று சவால் விட்டு, "ஏய், வாடி" என்று அவசரமாக அவள் உடைகளைக் களைகிறான்.......நம் கவனத்துக்கு வராத கீழ்மட்ட அபலை மனைவியின் அன்றாட நிச்சயமின்மை பற்றிய கதை.
'காணிக்கை' அப்படியே. ஸ்ரீரங்கத்தில் கோவில்களில் டூரிஸ்ட் கைடாக இருக்கும் ஒரு வயதான, ஏழை பிராமணன் பற்றிய கதை. காரில் வந்த இரண்டு பேரிடம் ஆவலுடன் இவர் சரித்திரத்தை விளக்க, அவர்களோ "அதெல்லாம் வுடு, ஐயரே! இங்கே இன்னும் தாசிங்கல்லாம் இருக்காங்களாமே, நெசம்மாவா?" என்கின்றனர். "அந்த வழக்கெல்லாம் முந்தைய காலத்தோட போயிண்டது.." அவர்கள் நம்பவில்லை. "உனக்கெல்லாம் தெரியும் ஐயரே, சொல்லமாட்டேங்கிற" . ஒரு கட்டத்தில் அவரிடம் "எங்களுக்கு ஒரு சந்தேகம் ஐயரே, இந்த 'ஐயர், அய்யங்கார் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்க, அவரும் "அவாள் அத்வைதிகள்; நாங்கல்லாம் வசிஷ்டாத்வைதிகள்" என்றதும் "தமாஷா கீது ஐயரே, மேலே சொல்லும்...". அவர்கள் எதிரில் அவர் பெண் அழுக்கு உடையில் வர, அவர்களும் இரக்கப்பட்டு பேசினதிற்கு மேலாகவே பணம் கொடுக்க, அதைத் தொட மனமின்றி ஸ்ரீரங்கம் கோவிலில் காணிக்கையாக உண்டியலில் போட்டு விடுகிறார். மனதை நெருடும் கதை.
'பொய்' ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் காலைக்காட்சியுடன் தொடங்குகிறது. கிச்சனில் இளம் மனைவி. வெராந்தாவில் நியூஸ்பேப்பருடன் கணவன். அடுத்த தெருவிலிருந்து அங்கே உதவி கேட்டு வரும் ஒருவன், தன் தாயார் அதிகாலை இறந்துவிட்டதாகவும், அடக்கம் செய்வதற்கு பணஉதவி செய்யுமாறும் கேட்கிறான். ஏமாற்றுவேலை என்று கூறி இவன் உதவ மறுத்துவிட, மனைவி கணவனிடம் வந்தது யார், என்ன விஷயம் என்கிறாள். "உதவியிருக்கலாம்...அம்மா இறந்துவிட்டாள் என்கிறானே...". அவனுக்குக் கோபம் வருகிறது. "உனக்கு இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம் தெரியாது...". பின் சிற்றுண்டி பரிமாரும்போதும் அவள் "என்னதான் இருந்தாலும்..... எதோ கொஞ்சமாச்சும் செஞ்சிருக்கலாம்" என்று சொல்ல, அவன் விருட்டென்று எழுகிறான்: "என்னை என்ன, இரக்கம் இல்லாதவன்கிறாயா ..? அடுத்த தெரு என்றுதானே சொன்னான்? இப்பவே போறேன்... நிஜம்மா இருந்தா நிச்சயமா ஹெல்ப் பண்ணறேன். போதுமா?" ஸ்கூட்டரை உதைத்துக்கிளம்புகிறான்.
அடுத்த தெருவின் மூலையில் அந்த சிறிய குடிசையின் முன் நாலு பேர் நின்றுகொண்டிருக்க, வாசலில் ஒரு பிணம் வைக்கப்பட்டிருக்கிறது. காலையில் வந்தவன் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறான்.....
இவன் 'சட்'டென்று திரும்பிவிடுகிறான். மனைவி வாசலில் "என்னங்க?" இவன்: "எல்லாம் பொய். அங்கே யாரும் சாகலை. ஒண்ணும் இல்லை..." அவள் திருப்திப் பெருமூச்சு விடுகிறாள். "அப்பா... எவ்ளோ பொய்..." என்கிறாள். Male-ego வை மெல்லிதாகக் கோடிட்டுக்காட்டும் கதை.
"பாலம்" கொஞ்சம் controversial கதை. கதையின் முக்கிய பாத்திரம் "கொலை உணர்ச்சி மனிதனின் ஆழ்மனதில் புதைந்துகிடக்கும் இயல்பான உணர்வுதான்..." என்கிற ரீதியில் ஆரம்பித்து, தான் செய்த கொலையைத் தன் வாழ்வின் magnum opus இன்று நியாயப்படுத்திப் பேசும் உரையாடல்கள் சுஜாதா கொலையை நியாயப்படுத்திப் பேசுவதாக இருந்தன (அல்லது) எடுத்துக்கொள்ளப்பட்டன.
"வாசல்" ஒரு நாடகம். வருடத்திற்கு ஒருமுறை வரும் மாமா பண்ணும் கலக்கல்களைப் பற்றியது. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசனையுடன் சொல்லி கதாபாத்திரங்களை நிஜமாக நடமாடவிட்டு, கதைக்கு திருப்பங்களோ, முரணோ, நீதியோ, ஆரம்பம்-முடிவு என்றோ எதுவுமே தேவையில்லை என்று காட்டுகிறார். சிறுகதை மற்றும் நாடகத்தைப் பற்றிய எந்த ஒரு விதிகளுக்குள்ளும் அடங்காமல், ஆனால் நம்மைக் கவனம் கலையாமல் படிக்க வைக்கும் நாடகம். "நாங்களும் மாமாவின் அசட்டுத்தனங்கள ரசித்து, அடுத்தமுறை எப்போ வருவார் என்று எதிர் பார்த்து இருப்போம். (விசும்பலுடன்) அடுத்தமுறை மாமா வரவிலை... அவரைப் பற்றிய செய்திதான் வந்தது" என்று முடியும் சின்ன நாடகம்.
"மாறுதலு"ம நாடகமே. 'மாறவே மாட்டேன்' என்கிற காரக்டரிடம் 'மாறுதல் வந்தே தீரும்' என்பத சொல்லும் இளைஞன். நாடகத்திற்குள் நாடகமாக வந்து 'இதுதான் மாறுதல்' என்று முடிகிறது. புதுக்கவிதை மாதிரி, புது நாடகம்?
"வந்தவன்" வயதான ஏழை பிராமண தம்பதி வீட்டிலேயே சைவ உணவகம் என்று போர்டு போட்டு நடத்தும் ஓட்டலுக்கு ஒருவன் மூடும் சமயம் வருகிறான். "ஏதும் இல்லையேப்பா" என்பவரிடம் "ரொம்பப் பசியாய் இருக்குது, ஐயரே" என்று வந்தவன் சொல்ல, இவர் "சரி, இருப்பதை சாப்பிட்டு போம்" என, மனைவியும் உணவு தயார் செய்கிறார். "இப்போ எல்லாம் முன்னே மாதிரி வியாபாரம் இல்ல" என்று ஐயர் பேசிக்கொண்டிருக்க, இவன் கண்கள் எதையோ தேடியவண்ணம் இருக்கின்றன. வந்தவன் திருடன். பேசிக்கொண்டே சாப்பாட்டை முடித்தவன் கல்லாப் பெட்டிபக்கம் வந்ததும் கத்தியைக்காட்டி, "மன்னிச்சுடு ஐயரே எனக்கு வேறு வழியில்லை. உனக்காவது ஒரு குடும்பம், வீடு, தொழில் இருக்கு..." என்று சொல்லி, கல்லாப் பட்டியின் சில்லறைகளையும், ஐயர் கையில் கட்டியிருந்த வாட்ச்சையும் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுகிறான்.
நிமிடத்தில் ஐயர் திகைப்பிலிருந்து மீண்டு, "சொல்ல மறந்துட்டேனே.. அந்த வாட்ச் அப்பப்ப கொஞசம் குலுக்கினாத்தான் ஓடும்..." என்று அவன் ஓடிய திசையில் சொல்கிறார். சாப்பாடு எடுத்துக்கொண்டு வரும் மனைவி, "அதற்குள் போயிண்டாரா? 'பசி’ன்னாரேன்னு பயத்தங்கஞ்சி கொஞ்சம் செஞ்சு கொண்டாந்தேன்..."என்கிறார்.
பெயர் மறந்துவிட்ட இன்னொரு கதை வேலை தேடி ரயிலில் சென்னை செல்லும் இளைஞனைப் பற்றியது. இதுவரை எந்த வேலையும் கிடைக்காமல், இந்த முறையாவது கிடைக்க வேண்டுமே என்ற தவிப்பில், சோகத்தில் அந்த இளன்ஞன். ரயிலில் அவன் பார்க்கும் எல்லோருமே ஆனந்தமாக இருப்பது போல் அவனுக்குத் தெரிகிறது. ஒரு சிறு பெண் குழந்தை துறு, துறு வென்று எல்லோரிடமும் சிரித்துப் பேசி விளையாடுகிறது. எல்லோர் கவனத்தையும் கவர்கிற அந்தக் குழந்தை, அங்கும் இங்கும் ஓடிய வண்ணம் இருக்கிறது. அந்தக் கம்பார்ட்மெண்ட்டின் கதவு மூடாமல், திறந்து இருக்கிறது.
இருளில் ரயில் வேகம் பிடிக்கிறது. கதை அந்த இளைஞனின் எண்ண ஓட்டங்களைச் சொல்லுகிறது. மற்ற பயனிகளை விவரிக்கிறது. கொஞ்சம் நேரத்தில் ஒரு இளம் தம்பதியர் பதற்றத்துடன் தம் குழந்தையைத் தேடி வருகின்றனர். "எங்கே அந்தக் குழந்தை?" என்று எல்லோரும் அங்கும் இங்கும் ஓடி விளையாடிய குழந்தையைத் தேடுகின்றனர். எங்கும் இல்லை. ஒருவர் "முதலில் ரயிலை நிறுத்துங்கப்பா.." என்று சங்கிலியை இழுக்கிறார். டி.டி.ஈ ஒடி வந்து, உடனே விஷயம் புரிந்து, டிரைவர் அழைக்கப் பட்டு, ரயில் கொஞ்ச தூரம் பின்னால் ரிவர்ஸில் போவது என்று முடிவாகி எல்லாக் கம்பார்ட்மெண்ட்டிலும் எல்லோரும் வெளியே பார்த்த வண்ணம் வர, சற்று தூரத்தில் ஒரு புதருக்குள் ’அது’ -அந்தக் குழந்தை- கிடப்பது தெரிகிறது. ஓடிச் சென்று குழந்தையை எடுக்கின்றனர்....
கதை சட்டென்று இளைஞன் இன்டர்வியூ சீனுக்கு மாறுகிறது. இன்டர்வியூ கமிட்டியில் ஒரு பெண் கண்ணில் ஆர்வத்துடனும் பதற்றத்துடனும் "குழந்தைக்கு ஒண்ணும் ஆகலையே?" என்று கேட்கிறார். "இல்லை, புதரில் விழுந்ததால் லேசான அடிதான்.. அதிர்ஷ்டம்" என்கிறான் இவன். ‘அப்பா!’ என்று மொத்தக் கமிட்டியும் உணர்ச்சிவசப் படுகிறது.
அடுத்த வாரம் அந்த வேலைக்கான ஆர்டர் வருகிறது. கவரைப் பிரித்துப் பார்த்து சந்தோஷத்தில் இருக்கும் அவன், "ஒருவேளை இந்த வேலை கிடைத்தது அந்தக் குழந்தை "பிழைத்துக் கொண்டதால்" தானோ என்னவோ" என்று நினைக்கிறான். ("பிழைத்துக் கொண்டதால்" என்பது கொடேஷன் மார்க்குகளுக்கு நடுவில் கொடுத்து, குழந்தை பிழைத்தது நிஜமல்ல என்று நமக்குத் தெரிகிறது)
அவரின் தொடர்கதைகளிலும் நாவல்களிலும் நாம் அந்தக் கதைமாந்தர்களுடன் சிலகாலம் வாழ்ந்தோம். 'பிரிவோம் சந்திப்போமி'ல் மதுமிதாவுடன் சேர்ந்து நாமும் பாபநாசத்தில் கொஞ்ச நாள் முதல்காதல் செய்து, பின் இன்னொருத்தனைக் கல்யாணம் செய்து அமேரிக்கா போய் புல்லரித்து, கனவுகண்டு, ஆச்சரியப்பட்டு, துரோகம் பார்த்து விபத்தில் பலியானபோது வருந்தினோம். 'கரையெல்லாம் செண்பகப்பூ'வில் கிராமம் போய், இன்று அந்தக் கதையை மறந்து, நாட்டுப்புறப் பாடல்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றோம். 'காகிதச்சங்கிலிகள்' படித்து 'சொந்தம் எல்லாம் இவ்வளவுதானா?' என்று அந்தப் புதுமனைவியுடன் சேர்ந்து நாமும் 'திக்'காகி நின்றோம். கிண்டி ஹாஸ்டலில் சனிக்கிழமைகளில் வரும் குமுதத்தின் ஒரே இதழுக்காக நான், நீ என்று முந்திக்கொண்டு, பிடுங்கிக்கொண்டு (பெரும்பாலும் பொன்ராஜ் தான் ஜெயிப்பான்) நாங்கள் படித்த தொடர்கதை -'கொலையுதிர் காலம்' ஹோலோகிராபியால் 'நிஜம்மாகவே' பேய் நடமாடியது. 'நில்லுங்கள் ராஜாவே'யின் முதல் அத்தியாயத்தில் வீட்டிற்கு வரும் கணவனைப்பார்த்து மனைவி "யார் நீங்க? யார் வேணும் உங்களுக்கு..?" என்கிறாள். "ஏய்..என்ன ஆச்சு உனக்கு?" என்றவன் தன் குழந்தையை அழைக்க, அதுவும் "நீங்க யார்". செல்ல நாயும் குரைக்கிறது. பிரச்சனை கேட்டு அக்கம்பக்கத்தினர் "என்ன சார், என்ன பிரச்சனை" என்கிறபோது அவன் நொந்து, "பெட்ரூமில் பீரோவுக்குப் பக்கத்தில் இருக்கிற என் கல்யாண போட்டோவைப் பாருங்கள்; நான் யாரென்று தெரியும்" என்கிறான். பெட்ரூமில் பீரோ இருக்கிறது, பக்கத்தில் போட்டோ இருக்கிறது. அதில் மனைவி சிரித்தவண்ணம் இருக்கிறாள். பக்கத்தில் மனைவியின் தோளில் கை வைத்துக்கொண்டு ....இதென்ன, இன்னொருவன்?
'தீண்டும் இன்பம்' மாணவன், காதலிக்கு hiv infection என்று தெரிந்ததும் பாஸ்போர்ட், விசா எல்லாம் கிழித்தெறிந்து, அமெரிக்காவில் MS படிக்கும் வாய்ப்பை உதறித்தள்ளி அவளுடன் சென்னையிலேயே இருந்துவிடுகிறான். "என்றாவது ஒருநாள்" நாவல் இப்படி ஆரம்பிக்கிறது: "என் பெயர் ராமகிருஷ்ணன். நிஜப்பெயர் அதுவல்ல; அதைப்பற்றி அப்புறம். இப்போது நான் ராமகிருஷ்ணன்". தலைமறைவாகத் திரியும் திருடன், தன்னை அவதூறு பேசியவனக் கொலை செய்துவிட்டு ஜெயிலில் இருக்கும் காதலனுக்காகக் காத்திருக்கும் பெண் -என்ற அடிமட்ட வாழ்க்கையின் எளிமையான இரண்டு கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் இந்தக்கதை இன்னும் தமிழ் டைரக்டர்கள் கண்ணில் படாதது, நாம் செய்த பாக்கியம்.
1979-ல் வீடியோ, வி.சி.டி., டி.வி.டி ஏதும் இல்லாத காலத்தில் தியேட்டருக்குப் போய் 17 தடவை பார்த்த "நினைத்தாலே இனிக்கும்" சுஜாதாவின் படைப்பு என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.
"கற்றதும் பெற்றதும்" -அவர் கதைகளின் பெயர்களைப் போலவே இந்தத் தலைப்பும் 'பளிச்'சென்று இருந்து, சுயசரிதமாகவும் இல்லாமல் விமர்சனமாகவும் இல்லாமல் ஒரு அனுபவப் பகிர்தலாக வந்தது."கற்றதும் பெற்றதுமி"ல் அவர் எழுதியதற்கு அப்புறமே நமக்கு புறநானூற்றின் வீச்சு புரிந்தது. நல்ல, மோசமான புதுக்கவிதைகளை அடையாளம் காணமுடிந்தது.
கடைசி வரை எழுதிக்கொண்டிருந்தவர், 'மேலே' எப்படி சும்மா இருப்பார் என்று தெரியவில்ல. விகடனில் ஒரு ரசிகர் கேட்டது போல் "சுஜாதா ஸார், "செத்ததும் பெற்றதும்" எப்போ எழுதப் போறீங்க?"
Feb 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Peyar Teriyaadha Kadayin Peyar "Sangili" If my memory is correct
Every youngster should read Pirivom Sandhipom - Atleast onec in his lifetime. Why is that you havent mentioned about "Theevugal Karai Yerukindrana" / "Mama Vijayam" / "Miss Tamizh Thaye Namaskaaram" in your blog. In fact one blog is not enough for that genius who was ALWAYS far ahead of his times.
”மிஸ் தமிழ்த் தாயே நமஸ்கார”த்தின் அத்தனை பக்கங்களும் எனக்கு அத்துப்படி. சுஜாதாவின் முழு வீச்சையும் எழுத ஆரம்பித்தால் அதுவே ஒரு புத்தமாகத்தான் முடியும்! உதாங்கர் குறிப்பிட்டிருந்த மற்ற இரண்டு கதைகளும் நான் படிக்கவில்லை. தேடுவேன்...
Post a Comment