Feb 14, 2009

நான் கடவுள் (Non-கடவுள்?)

படத்தில் இரண்டு கிழட்டுப் பிச்சைக்காரர்களின் உரையாடல்’ :
"சரி, விடுய்யா.... எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் (கடவுள்) பார்த்துக்கிட்டுத் தானே இருக்கான்....."

"தே***ப் பய.... .நம்மள மாதிரி ஈனப் பிறவிங்களுக்கு ஏதுடா சாமி..."

(மேலே தொடரும் முன்....). நீங்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவராக இருக்கலாம். சுனாமி, பூகம்பம், எய்ட்ஸ், பிறப்பிலேயே ஊனம், பட்டினிச் சாவு இவற்றை வசதியாக அலட்சியப்படுத்தி விட்டு, "இறைவா, என்னே உன் அன்பு!" என்று புல்லரிப்பவராக இருக்கலாம். அல்லது "நமக்கேன் வம்பு?" என்று ஊரோடு ஒட்ட ஒழுகி, குடும்பத்தோடு "Friday கோயிலுக்குக் கூட்டிட்டுப் போ"கிறவராக இருக்கலாம்.

யாராக இருந்தாலும், மேற்சொன்ன உரையாடல் அதன் பச்சையான வார்த்தைப் பிரயோகங்களை மீறி அதில் உள்ள *நியாயத்தை* ஒரு கணமாவது உங்களை யோசிக்க வைக்கிறதா? ("இல்லை" என்றால், 'நான் கடவுள்' உங்களுக்கான படம் இல்லை.).
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
90-ல் உ.பி.யில் வாரனாசிக்கு அருகில் வேலையில் இருந்தபோது, அங்கே வந்திருந்த வசீகரனுக்கும் எனக்கும் அந்த எண்ணம் வந்தது -இறந்து விட்ட எங்கள் அப்பாவிற்கு வாரனாசியில் ’திவசம்’ அல்லது அந்த மாதிரி ’ஏதோ ஒன்று’ செய்ய வேண்டி. அங்கே இங்கே விசாரித்து அதற்கான ஆட்களைப் பிடித்து, "பைசா, பைசா’ மட்டுமே குறியாய் இருந்த அந்த வடநாட்டு ’சாமி’கள்க் கண்டு திகைத்து, ஹிந்தி போதாமல் விலகினோம்.

இன்னொரு நாள் வாரனாசியின் ஜன நெருக்கடியான -மார்க்கெட் போலிருந்த அந்த சின்ன தெருவில் ஏதோ ஒரு "பிராமணாள் காபி, டிபன் ஓட்டலை"த் தேடி கூட்டத்தில் இடிபட்டு நடக்கையில், கூட்டத்தோடு கூட்டமாக நான்கு சைக்கிள் டையர் பொருத்திய ஒரு காய்கறித் தள்ளுவண்டியை ஒருவன் தள்ளிக்கொண்டு போக, அதில் முழுக்க வெள்ளைத் துணியால் மூடி இறுக்கமாகக் கட்டி ......ஒரு பிணம். பார்த்ததும் "திக்"கென்று" மனசுக்குள் ஏதோ பயம் தெறித்து, கூட வந்த வாணிஸ்ரீயை வேறு பக்கம் திருப்பி, பேச்சை மாற்றி, சில வினாடிகளில் "அதை"க் கடந்து கூட்டத்தில் கலந்தேன்.

அதற்கப்புறம் உ.பி. பக்கம் போகவில்லை. இருந்தும், காசியில் மரணத்துக்கு இருந்த ‘மரியாதை’ -அந்தக் காய்கறித் தள்ளுவண்டி -மனதில் தங்கிவிட்டது.

(ஃப்ளாஷ் பாக்கிலிருந்து மீண்டு...). காசியில் கேட்பார் யாருமில்லாத பிணங்களை எரிக்கும் கும்பலில் வேலை செய்பவன் ஒருவனைக் கொஞ்ச நேரம் பின் தொடரலாம், படத்தில். தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டு ’கஞ்சா’வில் இருப்பவன் போலிச்சாமியாகவோ, cult ஆகவோ இல்லாமல்.... சாமிக்குக் காட்டும் தீபத்தில் கஞ்சா பற்ற வைக்கிறான். "என்னண்ணே, தீபத்தை அசுத்தப்படுத்தறீங்க?" "நெருப்புக்கு ஏதுடா சுத்தம், அசுத்தம்?". இந்தக் காட்சி, நெருப்பை வணங்கும் இந்து மதத்தைப் பெருமையாகச் சொல்கிறதா, அல்லது தீபத்தில் கஞ்சா பற்ற வைப்பதை நியாயப்படுத்துகிறதா? (அல்லது இரண்டுமா, நான் நினைத்தபடி)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் பஸ்ஸில், ரயிலில் பயணிக்கும் போது தவறாமல் கண்ணில் படுபவர்கள் பிச்சைக்காரர்கள். அதில் உரத்த குரலில் பாடிப் பிச்சை கேட்பவர்கள், பெரும்பாலும் குருடர்கள். இன்னும் கொஞ்சம் யோசித்தால், அந்தக் குருட்டுப் பிச்சைக்காரர்கள் பாடும் பாட்டுக்கள் கீழே வரும் 4-5க்குள் அடங்கிவிடும்:

"அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே..."
"சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை..."
"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..."
"தாயில் சிறந்த கோயிலும் இல்லை..."


அப்படியொரு குருட்டுப் பிச்சைகாரியைத் தொடர்ந்து, அவள் வாழ்க்கையை இன்னும் சில மணி நேரம் கவனிக்க உங்களுக்குப் பொறுமை இருக்கிறதா? இந்த டைரக்டர் ஒரு நிஜ பிச்சைக்காரர் கூட்டத்துடன் உங்களை சில மணி நேரம் கவனம் கலையாமல் இருக்க வைக்கிறார். பஸ்ஸிலும் ரயிலிலும் நாம் பார்த்திருந்த அதே பிச்சைக்காரர்கள். கேட்டிருந்த அதே பாட்டுக்கள். அதே அவலங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிச்சைக்காரர்களின் sense of humor-ஐ நம்ம ஊரில் பார்த்திருக்கலாம். ஒருமுறை சென்னை மின்சார ரயிலில்"ஐயா, ஒரு 5 பைசா, 10 பைசாவாச்சும் போடுங்கையா..." என்று இரண்டு ரவுண்ட் வந்த பிச்சைக்காரர் கலெக்‌ஷனில் பைசா பெறாததால் இறங்கும்போது கொஞ்சம் சத்தமாக "ஒரு 5 பைசா, 10 பைசா இருந்தா போடுங்கையா..." என்று கூவிவிட்டு சரேலென்று இறங்கிப் போனார். (கவனிக்க "ர்" - 'நான் கடவுள்' effect?)

இந்தப் படத்தில் "பிச்சைக்காரப் பயலுக்கு என்ன பேச்சு பாரு?" என்ற கமெண்ட்டிற்கு ஒரு நொண்டிப் பிச்சைக்காரப் பொடியனின் பதில்: "ஆமா, இவரு பெரிய அம்பானி" ("அது சரி, அம்பானி யாரு?" "செல் போன் விக்கிறவர்... உனக்கு அதெல்லாம் தெரியாது")

Toy Story அனிமேஷன் படத்தில் பொம்மைகள் ஒன்றோடொன்று வம்பளந்து கொண்டிருந்ததை நினைவு படுத்துகிறது, பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் ஜோக் அடித்துக்கொள்ளும் காட்சி. Toy Story ஏன் நினைவுக்கு வரவேண்டும் என்று யோசியுங்கள்..... நாம் மனிதர்கள் லிஸ்டில் பிச்சைக்காரர்களை சேர்ப்பதில்லை என்பது தெரியவரும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைக்கு வேறெந்த முடிவு வைத்தாலும் அது ‘பத்தோடு பதினொன்றா’கி இருக்கும். டைரக்டருக்கு அந்த விபரீத முடிவின் மேல் அபார நம்பிக்கை, வலுவான சம்பவங்களிலும் கதாபாத்திரங்களிலும் மிகத் திறமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அந்த கொடூரமான முடிவில் ஆன்மீகத்தைக் கலந்திருப்பது...... ஒரு கணம் "இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு இதுதானோ" என்று தோன்றி ’திக்’கென்கிறது. வேறு வழி எந்த மதத்திலும் இல்லையென்பதை படத்தின் சம்பவங்கள் மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன. ஆழமாக யோசிக்க வைக்கும் தீர்க்கமான முடிவு, திரைக்கதையை வேறு லெவலுக்குக் கொண்டு செல்கிறது. ...... .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் கடவுள் சொல்வது -இந்தியப் பிச்சைக்காரர்களின் கதையை. அவர்கள் அடி படுவதை. கை,கால் ஒடிக்கப்படுவதை. பொட்டலம் போல் விற்கப்படுவதை. சாவதை. "சாவது தான் சரி" என்று நாம் உணர்வதை.

("India shines" optimist-களும், "அன்பே சிவம்" ‘தேவனின் கருணை" என்று புளகாங்கிதத்தில் இருப்பவர்களும் படத்தைத் தவிர்க்கவும்.)

0 comments:

Post a Comment